பக்கம் எண் :

பொருட்பால்
அரசியல்

அதிகாரம் 60. ஊக்கமுடைமை

அஃதாவது ,வினைசெய்வதில் தளர்ச்சியின்றி மேன்மேலுங் கிளர்ச்சி பெறுதல்.ஒற்றரால் நிகழ்ந்தவற்றை யறிந்து அவற்றிற் கேற்ப வினைசெய்யும் அரசனுக்கு இது இன்றியமையாயின், ஒற்றாடலின் பின் வைக்கப்பட்டது. ஊ- ஊங்கு = முன். ஊங்குதல் = முன்செல்லுதல். ஊக்குதல்=முற்செலுத்துதல், உள்ளத்தை வினையில் முன்செல்லத்தூண்டுதல்.ஊங்கு-ஊக்கு -ஊக்கம்.

 

உடைய ரெனப்படுவ தூக்கமஃ தில்லா
ருடைய துடையரோ மற்று.

 

உடையர் எனப்படுவது ஊக்கம் -ஒருவரைச் செல்வமுடையார் என்று சொல்லக் கரணியமாயிருப்பது முயற்சியுள்ளம்; அஃது இல்லார் மற்று உடையது உடையரோ - அம்முயற்சியுள்ளம் இல்லாதார் வேறேதேனும் உடையராயினும் உடையராவரோ ? ஆகார்.

வேறுடையது என்றது முதுசொம் எனப்படும் முன்னோர் தேட்டை . காக்கும் ஆற்றலின்மையால் அதையும் இழப்பர் என்பதாம் . எச்சவும்மை தொக்கது.