பக்கம் எண் :

பொருட்பால்
அரசியல்

அதிகாரம். 63. இடுக்கணழியாமை

அஃதாவது, ஆள்வினையில் ஈடுபட்டவன், இயற்கையாலேனும் தெய்வத்தாலேனும் இருவகைப்பகைவராலேனும் வினைக்கு இடையூறாகத் துன்பங்கள் நேர்ந்த விடத்து, அவற்றால் மனங் கலங்காமை. அதிகார முறையும் இதனால் விளங்கும்.

 

இடுக்கண் வருங்கா னகுக வதனை
யடுத்தூர்வ தஃதொப்ப தில்.

 

இடுக்கண் வருங்கால் நகுக-ஒருவன் வினையாற்றும் போது இடையில் தடைபோலத் துன்பம் வரின் அதற்கு வருந்தாது அதை எள்ளி நகையாடுக; அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்-அதனை மேன்மேல் நெருங்கி மேற்கொள்வதற்கு அது போன்ற வழி வேறொன்றுமில்லை.

வினை வெற்றிக்கு அஞ்சாமையொடு கூடிய மனவுறுதி இன்றியமையாததாதலின், எதிர்த்து வரும் பகைவனை எள்ளி நகையாடுவது போன்றே வினைக்கு இடையூறாக வரும் துன்பத்தையும் பொருட் படுத்தற்க என்பார் 'நகுக' என்றார். அதனால் முயற்சிக்குத் தடையின்மையால், வினை வெற்றியாக முடியும் என்பதாம். அடுத்தூர்தல் என்பது, ஓர் அடங்காக் குதிரையை நெருங்கி யேறி யடக்குதல் போல்வதாம்.