பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 65. சொல்வன்மை

அஃதாவது, அமைச்சன் தன் சூழ்ச்சியை அரசனுக்கு எடுத்துச் சொல்வதில் வல்லவனாதல். மேற்கூறிய அமைச்சிலக்கணங்களுள் ஒன்றான 'ஒருதலையாச் சொல்லலும் வல்லது' (634) என்றதனை விரித்துக் கூறுவதால், இது அமைச்சின் பின் வைக்கப் பட்டது.

 

நாநல மென்னு நலனுடைமை யந்நலம்
யாநலத் துள்ளதூஉ மன்று.

 

நாநலம் என்னும் நலன் உடைமை -நாநலம் என்று அறிவுடையோரால் உயர்வாகச் சொல்லப்படும் நன்மை அமைச்சர்க்குச் செல்வம் ஆவதாம்; அந்நலம் யா நலத்து உள்ளதூஉம் அன்று - அந்நன்மை வேறு எவ்வகை நற்பேறுகளுள்ளும் அடங்காது தனிப்பட்டதாம்.

நாவின் நலம் நாநலம். அது நாவின் நன்மையும் வன்மையுங் கலந்ததாம். நன்மை பிறருக்கு நன்மை செய்வதும் வன்மை பிறரை வயப்படுத்துவது மாகும். இப்பேறு தனிப்பட்டதாதலின், 'யாநலத்துள்ளதூஉமன்று' என்றார். 'உள்ளதூஉம்' இன்னிசையள பெடை.