பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 66. வினைத்தூய்மை

அஃதாவது, அறநூல் முறையிலும் அரசியல் முறையிலும் அமைச்சர் செயல் குற்றமில்லாததாயிருத்தல். சொல்வன்மை போன்றே செயல் நன்மையும் அமைச்சர்க்கு இருத்தல் வேண்டுமென்பதுபற்றி , இது சொல்வன்மையின் பின் வைக்கப்பட்டது.

 

துணைநல மாக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய வெல்லாந் தரும்.

 

துணைநலம் ஆக்கம் தரும் - ஒருவனுக்குத்துணையின் நன்மை செல்வம் ஒன்றையே தரும்; வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் - ஆயின் , வினையின் நன்மையோ செல்வம் உட்பட ஒருவனுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தரும்.

'வேண்டிய வெல்லாம்' என்பன, இம்மையில் அறம் பொருளின்பமும் மறுமையில் புகழ் விண்ணின்பம் வீட்டின்பமு மாம். பிறர் துணையினுந் தூய்மை சிறந்ததென வினைத்தூய்மையின் சிறப்புக் கூறப்பட்டது. 'தரூஉம்' இசைநிறையளபெடை.