பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 85. புல்லறிவாண்மை

அஃதாவது, சிற்றறிவுடையராயிருந்து அதை ஆளுந்தன்மை. ஆளுதல் பயன்படுத்துதல். பேதமைபோல இதுவும் ஒரு தற்பகைக் குணமாதலின், பேதமையின் பின் வைக்கப்பட்டது.

 

அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை
யின்மையா வையா துலகு.

 

இன்மையுள் இன்மை அறிவு இன்மை--ஒருவனுக்கு வறுமைக ளெல்லாவற்றுள்ளும் மிகக்கொடியது அறிவில்லாமை; பிறிது இன்மை உலகு இன்மையா வையாது--மற்றச் செல்வமின்மையை உயர்ந்தோர் வறுமையாகக் கருதார்.

அறிவு என்னும் பொதுப்பெயர் இங்கு வழக்குப்பற்றி நல்லறிவைக் குறித்த்து. அறிவில்லார் செல்வம் பெற்றவிடத்தும் அதனாற் பெறக்கூடிய இம்மை மறுமைப் பேறுகளைப் பெறாமையின், அதை'இன்மையு ளின்மை' என்றும், அறிவாளர் வறியவராயிருந்த விடத்தும் இருமைப் பேறுகளையும் பெறுதலால் அதை 'இன்மையாவையாது' என்றும், கூறினார். 'இன்மைச் சொல் பின்னும் வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி' 'ஆக' என்னும் வினையெச்சவீறு கடைக்குறைந்து, நின்றது. 'உலகு' ஆகுபெயர்.