211. உழந்ததூஉம் பேணார், ஒறுத்தமை கண்டும்,
விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல்,-
தழங்கண் முழவு இயம்பும் தண் கடல் சேர்ப்ப!-
முழம் குறைப்பச் சாண் நீளுமாறு.
உரை
   
212. உலப்பு இல் உலகத்து உறுதியே நோக்கிக்
குலைத்து அடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல்-
மலைத்து அழுது உண்ணாக் குழவியைத் தாயர்
அலைத்துப் பால் பெய்துவிடல்.
உரை
   
213. சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்து ஒழுகப்பட்டவர்
தீர்ந்தாராக் கொண்டு தெளியினும், தேர்ந்தவர்க்குச்
செல்லாமை காணாக்கால், செல்லும்வாய் என் உண்டாம்?-
எல்லாம் பொய்; அட்டு ஊணே வாய்.
உரை
   
214. நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியேபோல்,
வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகும்;-
தாறாப் படினும், தலைமகன் தன் ஒளி,
நூறாயிரவர்க்கு நேர்.
உரை
   
215. சிறந்து, நுகர்ந்து ஒழுகும் செல்வம் உடையார்
அறம் செய்து அருள் உடையர் ஆதல்,-பிறங்கல்
அமையொடு வேய் கலாம் வெற்ப!-அதுவே,
சுமையொடு மேல் வைப்பு ஆமாறு.
உரை
   
216. அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்,
‘இடம் கண்டு அறிவாம்’ என்று எண்ணி இராஅர்;-
மடம் கொண்ட சாயல் மயில் அன்னாய்!-சான்றோர்
கடம் கொண்டும் செய்வர் கடன்.
உரை
   
217. ஈட்டிய ஒண் பொருள் இல் எனினும், ஒப்புரவு
ஆற்றும், குடிப் பிறந்த சான்றவன்;-ஆற்றவும்
போற்றப் படாதாகி, புல் இன்றி மேயினும்,
ஏற்றுக் கன்று ஏறாய் விடும்.
உரை
   
218. அடுத்து ஒன்று இரந்தாற்கு ஒன்று ஈந்தானை, கொண்டான்,
படுத்து, ‘ஏழையாம்!’ என்று போகினும் போக!-
அடுத்து ஏறு அல் ஐம்பாலாய்!-யாவர்க்கேயானும்
கொடுத்து, ஏழை ஆயினார் இல்.
உரை
   
219. திரியும், இடிஞ்சிலும், நெய்யும், சார்வு ஆக
எரியும், சுடர் ஓர் அனைத்தால்; தெரியுங்கால்,
சார்வு அற ஒடிப் பிறப்பு அறுக்கும்; அஃதேபோல்,
நீர் அற, நீர்ச் சார்வு அறும்.
உரை
   
220. உறுகண் பலவும் உணராமை கந்தா,
தறுகண்மை ஆகாதாம் பேதை, ‘தறுகண்
பொறிப் பட்ட ஆறு அல்லால், பூணாது’ என்று எண்ணி,
அறிவு அச்சம் ஆற்றப் பெரிது.
உரை