3. பாலை
29. எழுத்துடைக் கல் நிரைக்க வாயில் விழுத் தொடை
அம் மாறு அலைக்கும் சுரம் நிரைத்து, அம் மாப்
பெருந் தகு தாளாண்மைக்கு ஏற்க அரும் பொருள்
ஆகும், அவர் காதல் அவா.
உரை
   
30. வில் உழுது உண்பார் கடுகி அதர் அலைக்கும்
கல் சூழ் பதுக்கை ஆர் அத்தத்து இறப்பார்கொல்-
மெல் இயல் கண்ணோட்டம் இன்றி, பொருட்கு இவர்ந்து,
நில்லாத உள்ளத்தவர்?
உரை
   
31. பேழ் வாய் இரும் புலி குஞ்சரம் கோள் பிழைத்துப்
பாழ் ஊர்ப் பொதியில் புகாப் பார்க்கும் ஆர் இடை,
சூழாப் பொருள் நசைக்கண் சென்றோர், அருள் நினைந்து,
வாழ்தியோ மற்று என் உயிர்?
உரை
   
32. நீர் இல் அருஞ் சுரத்து ஆமான்இனம் வழங்கும்
ஆர் இடை அத்தம் இறப்பர்கொல்?-ஆயிழாய்!-
நாணினை நீக்கி, உயிரோடு உடன் சென்று
காண, புணர்ப்பதுகொல் நெஞ்சு?
உரை
   
33. பொறி கிளர் சேவல் வரி மரல் குத்த,
நெறி தூர் அருஞ் சுரம் நாம் உன்னி, அறிவிட்டு
அலர் மொழிச் சென்ற கொடி அக நாட்ட,
வலன் உயர்ந்து தோன்றும் மலை.
உரை
   
34. பீர் இவர் கூரை மறு மனைச் சேர்ந்து அல்கி,
கூர் உகிர் எண்கின் இருங் கிளை கண்படுக்கும்,
நீர் இல், அருஞ் சுரம் முன்னி அறியார்கொல்,
ஈரம் இல் நெஞ்சினவர்?
உரை
   
35. சூரல் புறவின் அணில் பிளிற்றும் சூழ் படப்பை
ஊர் கெழு சேவல் இதலொடு போர் திளைக்கும்
தேரொடு கானம், தெருள் இலார் செல்வார்கொல்,
ஊர் இடு கவ்வை ஒழித்து?
உரை
   
36. முள்ளுடை மூங்கில் பிணங்கிய சூழ் படப்பை,
புள்ளி வெருகு தன் குட்டிக்கு இரை பார்க்கும்
கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.
உரை
   
37. பொரி புற ஓமைப் புகர் படு நீழல்,
வரி நுதல் யானை பிடியோடு உறங்கும்
எரி மயங்கு கானம் செலவு உரைப்ப, நில்லா,
அரி மயங்கு உண்கண்ணுள் நீர்.
உரை
   
38. கோள் வல்.... வய மாக் குழுமும்
தாள் வீ பதுக்கைய கானம் இறந்தார்கொல்-
ஆள்வினையின் ஆற்ற அகன்றவா நன்று உணரா
மீளி கொள் மொய்ம்பினவர்?
உரை
   
39. கொடுவரி பாயத் துணை இழந்து அஞ்சி,
கடு உணங்கு பாறைக் கடவு தெவுட்டும்
நெடு வரை அத்தம் இறப்பர்கொல், கோள் மாப்
படு பகை பார்க்கும் சுரம்?
உரை
   
40. மன்ற முது மரத்து ஆந்தை குரல் இயம்ப,
குன்றகம் நண்ணி, குறும்பு இறந்து சென்றவர்
உள்ளிய தன்மையர் போலும்-அடுத்து அடுத்து
ஒள்ளிய தும்மல் வரும்.
உரை
   
41. பூங் கண் இடம் ஆடும்; கனவும் திருந்தின;
ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம் நினைப்ப,
வீங்கிய மென் தோள் கவினிப் பிணி தீர,
பாங்கத்துப் பல்லி படும்.
உரை
   
42. ‘ஒல்லோம்!’ என்று ஏங்கி, உயங்கி இருப்பவோ?
கல் இவர் அத்தம், அரி பெய் சிலம்பு ஒலிப்பக்
கொல் களிறு அன்னான்பின் செல்லும்கொல், என் பேதை
மெல் விரல் சேப்ப நடந்து?
உரை