2. பாலை
தலைமகனது செலவு உணர்ந்து, வேண்டாத மனத்தாளாய், தலைமகள்
தோழிக்குச் சொல்லியது
11. கழுநீர் மலர்க் கண்ணாய்! கௌவையோ நிற்க,
பொருள் நீரார் காதலர் பொய்த்தனர், நீத்தார்-
அழி நீர ஆகி, அரித்து எழுந்து தோன்றி,
வழி நீர் அறுத்த சுரம்.
உரை
   
'யான் பிரியத் தலைமகள் ஆற்றுமோ? நீ அறிவாயாக!'என்ற தலைமகற்குத்
தோழி சொல்லியது
12. முரி பரல ஆகி, முரண் அழிந்து தோன்றி,
எரி பரந்த கானம் இயை பொருட்குப் போவீர்;
அரி பரந்த உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
தெரிவார் யார், தேரும் இடத்து?
உரை
   
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
13. ஓங்கு குருந்தோடு அரும்பு ஈன்று பாங்கர்
மராஅ மலர்ந்தன, தோன்றி; விராஅய்க்
கலந்தனர் சென்றார் வலந்த சொல் எல்லாம்-
பொலந்தொடீஇ!-பொய்த்த குயில்.
உரை
   
14. புன்கு பொரி மலரும் பூந் தண் பொழில் எல்லாம்
செங் கண் குயில் அகவும் போழ்து கண்டும்,
பொருள் நசை உள்ளம் துரப்ப, துறந்தார்
வரு நசை பார்க்கும், என் நெஞ்சு.
உரை
   
'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
15. சிறு புன் புறவொடு சிற்றெழால் சீறும்
நெறி அரு நீள் சுரத்து அல்குவர்கொல்,-தோழி!-
முறி எழில் மேனி பசப்ப, அருள் ஒழிந்து,
ஆர் பொருள் வேட்கையவர்?
உரை
   
புணர்ந்து உடன்போகிய தலைமகன், தலைமகளை ஆற்றுவித்துக் கொண்டு சொல்லியது
16. கருங் கால் மராஅ நுணாவோடு அலர,
இருஞ் சிறை வண்டுஇனம் பாலை முரல,-
அரும்பிய முள் எயிற்று அம் சொல் மடவாய்!-
விரும்பு, நாம் செல்லும் இடம்.
உரை
   
'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
17. கல் அதர் வாயில், கடுந் துடிகள் பம்பும்
வில் உழுது வாழ்நர் குறும்புள்ளும், போவர்கொல்-
எல் வளை மென் தோள் நெகிழ, பொருள் நசைஇ,
நல்காத் துறந்த நமர்?
உரை
   
செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் உடன்படாது சொல்லியது
18. கதிர் சுட, கண் உடைந்து, முத்தம் சொரியும்
வெதிர் பிணங்கும் சோலை வியன் கானம் செல்வார்க்கு
எதிர்வன போலிதே? எல் வளையோ, கொன்னே
உதிர்வன போல உள!
உரை
   
'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
19. கலையொடு மான் இரங்கு கல் அதர் அத்த
நிலை அஞ்சி, நீள் சுரத்து அல்குவர்கொல்?-தோழி!-
முலையொடு சோர்கின்ற, பொன் வண்ணம்; அன்னோ!
வளையொடு சோரும், என் தோள்.
உரை
   
மகள் போக்கிய நற்றாய் சொல்லியது
20. ஏற்றிய வில்லின் எயினர் கடுஞ் சுரம்,
பாற்றினம் சேரப் படுநிழல் கண்டு அஞ்சி,
கூற்று அன வல் வில் விடலையோடு என் மகள்
ஆற்றும்கொல், ஐய நடந்து?
உரை