4. மருதம்
தலைமகள் வாயில் மறுத்தது
31. பழனம் படிந்த படு கோட்டு எருமை
கழனி வினைஞர்க்கு எறிந்த பறை கேட்டு,
உரன் அழிந்து, ஓடும் ஒலி புனல் ஊரன்
கிழமை உடையன், என் தோட்கு.
உரை
   
32. கணைகால் நெடு மருது கான்ற நறுந் தாது
இணைக் கால நீலத்து இதழ்மேல் சொரியும்
பணைத் தாட் கதிர்ச் செந்நெல் பாய் வயல் ஊரன்
இணைத்தான், எமக்கும் ஓர் நோய்.
உரை
   
தோழி வாயில் மறுத்தது
33. கடையாயார் நட்பேபோல், காஞ்சி நல் ஊர!
உடைய இள நலம் உண்டாய்; கடை, அக்
கதிர் முலை ஆகத்துக் கண் அன்னார் சேரி
எதிர் நலம் ஏன்று நின்றாய்.
உரை
   
தலைமகள் பாணற்கு வாயில் மறுத்தது
34. செந்நெல் விளை வயல் ஊரன், சில பகல்,
தன் நலம் என் அலார்க்கு ஈயான்; எழு-பாண!-
பாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள்,
வாரிக்குப் புக்கு, நின்று, ஆய்!
உரை
   
35. வேனில் பருவத்து எதிர் மலர் ஏற்று ஊதும்
கூனி வண்டு அன்ன குளிர் வயல் நல் ஊரன்
மாண் இழை நல்லார் இள நலம் உண்டு, அவர்
மேனி ஒழியவிடும்.
உரை
   
தோழி வாயில் நேர்வாள் கூறியது
36. செந்தாமரை மலரும் செய் வயல் நல் ஊர!
நொந்தால் மற்று உன்னைச் செயப்படுவது என் உண்டாம்-
தந்தாயும் நீயே; தர வந்த நல் நலம்
கொண்டாயும் நீ ஆயக்கால்?
உரை
   
பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது
37. பல் காலும் வந்து பயின்று உரையல்!-பாண!-கேள்;
நெல் சேர் வள வயல் ஊரன் புணர்ந்த நாள்,
எல் வளையம்; மென் தோளேம்; எங்கையர்தம் போல
நல்லவருள் நாட்டம் இலேம்.
உரை
   
38. நல் வயல் ஊரன் நலம் உரைத்து, நீ-பாண!-
சொல்லின் பயின்று உரைக்க வேண்டா; ஒழிதி, நீ!
எல்லு நல் முல்லைத் தார் சேர்ந்த இருங்கூந்தல்
சொல்லும், அவர் வண்ணம் சோர்வு.
உரை
   
வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்தது
39. கருங் கயத்து ஆங்கண் கழுமிய நீலம்
பெரும் புற வாளைப் பெடை கதூஉம் ஊரன்
விரும்பு நாள் போலான்; வியல் நலம் உண்டான்;
கரும்பின் கோது ஆயினேம் யாம்.
உரை
   
'இந் நிலத்தின்கண் இன்ன பெற்றியால் வருவாயாக!' எனச் சொல்லியது
40. ஆம்பல் அணித் தழை ஆரம் துயல்வரும்
தீம் புனல் ஊரன் மகள் இவள்; ஆய்ந்த நறுந்
தே மலர் நீலம் பிணையல்; செறி மலர்த்
தாமரை, தன்னையர் பூ.
உரை