5. நெய்தல்
அல்லகுறிப்பட்டுப் பெயர்ந்த தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக,
தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது
41. நெய்தல் படப்பை நிறை கழித் தண் சேர்ப்பன்
கைதை சூழ் கானலுள் கண்ட நாள்போல் ஆனான்;
செய்த குறியும் பொய் ஆயின;-ஆயிழையாய்!-
ஐதுகொல், ஆன்றார் தொடர்பு?
உரை
   
தோழி வரைவு கடாயது
42. முத்தம் அரும்பும் முடத் தாள் முது புன்னை
தத்தும் திரை தயங்கும் தண் அம் கடற் சேர்ப்ப!
சித்திரப் பூங் கொடி அன்னாட்கு அருளீயாய்,
வித்தகப் பைம் பூண் நின் மார்பு!
உரை
   
அல்லகுறிப்பட்டுப் பெயர்ந்த தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக,
தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது
43. எறி சுறா நீள் கடல் ஓதம் உலாவ,
நெறி இறாக் கொட்கும் நிமிர் கழிச் சேர்ப்பன்,-
அறிவு அறா இன் சொல் அணியிழையாய்!-நின் இல்
செறிவு அறா, செய்த குறி.
உரை
   
தலைமகனைக் கண்ணுற்று நின்ற தோழி வரைவு கடாயது
44. இன மீன் இருங் கழி ஓதம் உலாவ,
மணி நீர் பரக்கும் துறைவ! தகுமோ-
குண நீர்மை குன்றாக் கொடி அன்னாள் பக்கம்
நினை நீர்மை இல்லா ஒழிவு?
உரை
   
45. கடல் கொழித்திட்ட கதிர் மணி முத்தம்
படம் அணி அல்குல் பரதர் மகளிர்
தொடலை சேர்த்து ஆடும் துறைவ! என் தோழி
உடலும், உறு நோய் உரைத்து.
உரை
   
46. முருகு இயல் கானல் அகன் கரை ஆங்கண்
குருகுஇனம் ஆர்க்கும் கொடுங் கழிச் சேர்ப்ப!
மருவி வரலுற வேண்டும், என் தோழி
உரு அழி உள் நோய் கெட.
உரை
   
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழியால் சொல் எடுப்பப்பட்டு,
தலைமகள் சொல்லியது
47. அணி பூங் கழிக் கானல், அற்றை நாள் போலான்;
மணி எழில் மேனி மலர் பசப்பு ஊர,
துணி கடற் சேர்ப்பன் துறந்தான்கொல்?-தோழி!-
தணியும், என் மென் தோள் வளை.
உரை
   
தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது
48. கறங்கு மணி நெடுந் தேர் கண் வாள் அறுப்ப,
பிறங்கு மணல்மேல் அலவன் பரப்ப,
வறம் கூர் கடுங் கதிர் வல் விரைந்து நீங்க,
நிறம் கூரும் மாலை வரும்.
உரை
   
தலைமகன் பாங்கற்குச் சொல்லியது
49. மயில்கொல்? மடவாள்கொல்? மாநீர்த் திரையுள்
பயில்வதோர் தெய்வம்கொல்?-கேளீர்!-குயில் பயிரும்
கன்னி இள ஞாழல் பூம் பொழில் நோக்கிய
கண்ணின் வருந்தும், என் நெஞ்சு.
உரை
   
பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்
தோழி வரைவு கடாயது
50. பவழமும் முத்தும் பளிங்கும் விரைஇ,
புகழக் கொணர்ந்து, புறவு அடுக்கும் முன்றில்,
தவழ் திரைச் சேர்ப்பன் வருவான்கொல்?-தோழி!-
திகழும், திரு அமர் மார்பு.
உரை