ஐம்பெருங்காப்பியங்களுள்
ஒன்றாகிய சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் இயற்றப்பெற்ற செந்தமிழ் நூல். இது தமிழன்னையின்
செவ்விய மணியாரம் போல் விளங்குவது. இயற்றமிழேயன்றி இசைத்தமிழ் நாடகத் தமிழ்
என்னும் மூன்றின் பெருமையும் அறிந்து கொள்வதற்கு ஏற்ற துணையாயிருப்பது.
ஏட்டுச் சுவடிகளில் இருந்த இந்த நூலினைப்
பழைய அரும்பதவுரையோடும் அடியார்க்கு நல்லார் உரையோடும் வெளியிட்டவர் டாக்டர்
உ.வே. சாமிநாத அய்யர் அவர்களேயாவர். அவர்தம் ஆராய்ச்சிக் குறிப்புகள் தமிழறிஞர்களின்
பாராட்டுக்குரியன.
நூல் முழுவதிலும் உள்ள முப்பது காதைகளில்
பதினெட்டு காதைகளுக்கு மட்டுமே அடியார்க்கு நல்லார் உரை கிடைத்துள்ளது. அரும்பதவுரையைக்
கொண்டு நூலின் பொருள் முழுவதும் அறிவது அருமையாகும். பாகனேரிச் செந்தமிழன்பர் மு.
காசிவிசுவநாத செட்டியாரவர்கள் நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களைக்
கொண்டு சிலப்பதிகாரம் நூல் முழுமைக்கும் உரையொன்று எழுதச் செய்து வெளியிடுதல் வேண்டுமென
விரும்பினார்கள். கழகத்தின் ஆட்சியாளராக இருந்த திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்கள்
உறுதுணையினால் இந் நூல் செவ்விய முறையில் வெளிவந்தது. கழகத்தின் வழியாகவே வெளியிடவேண்டு
மென்று அறிஞர் பலர் விரும்பினார்கள்.
இப்பொழுது கழகத்தின் வழியாக சிலப்பதிகாரம்
முழுவதும் உரையுடன் வெளியிடப்பெறுகின்றது. அறிஞர் பெருமக்களும் தமிழன்பர்களும் வாங்கிப்
பயன்பெற விரும்புகிறோம்.
--சைவசித்தாந்த
நூற்பதிப்புக் கழகத்தார்.
|