[சேர வேந்தனாகிய செங்குட்டுவன் மலை வளங் காண விரும்பி விளையாட்டிற்குரிய பலவகைப்
பொருளுங் கொண்டு தானைகள் சூழத் தன் தேவியாகிய வேண்மாளுடன் வஞ்சி நகரினின்றும்
புறப்பட்டுச் சென்று பேராற்றங் கரையிலுள்ள மணற் குன்றிலே தங்கியிருந்தான்; குன்றக்
குரவை முதலியவற்றா லெழுந்த பலவகை ஓசைகள் அவர்கட்கு இன்பம் விளைத்தன. கண்ணகி விமானமேறிச்
சென்ற அதிசயத்தைக் தங்கள் நாட்டிற்கு அரசனாகிய குட்டுவனிடம் தெரிவிக்கக் கருதிய
மலை வாணர்கள் குறிஞ்சியிற் கிடைப்பனவாகிய பல வகைப் பொருள்களையும் காணிக்கையாகக்
கொண்டு சென்று அரசனைக் கண்டு அதனைக் கூறினார்கள்; அப்பொழுது அங்கு வந்து செங்குட்டுவனோ
டிருந்த மதுரைத் தமிழாசிரியராகிய சாத்தனார் மதுரையிற் கோவலன் கொலையுண்டதும்,
கண்ணகி அரசன் முன் வழக்குரைத்து வென்று மதுரையை எரித்ததும், நெடுஞ் செழியன் தேவியுடன்
அரசு கட்டிலிற் றுஞ்சியதும் முதலிய செய்திகளை விரித்துரைத்தார். அவற்றைக் கேட்ட
செங்குட்டுவன் பாண்டியன் இறந்ததற்கு வருந்தி, தன் தேவியின் வேண்டுகோளால் பத்தினிக்
கடவுளாகிய கண்ணகியைப் பிரதிட்டை செய்து வழிபடுதற்கு இமய மலையிற் கல் கால்கொள்ளக்
கருதி வஞ்சி நகரை அடைந்து, தான் இமயத்திற்குப் புறப்படுவதனையும், வடதிசையிலுள்ள
மன்ன ரெல்லாம் திறையுடன் வந்து காண வேண்டுமென்பதனையும் தெரிவித்து நகரின்கண் பறை
அறைவித்தான். (இதன்கண் வேட்டுவர்கள் காணிக்கை கொண்டுவந்தமை கூறுமிடத்து மலைபடு
பொருள்கள் பலவும் வனப்புறக் காட்டப்பெற்றுள்ளன. செங்குட்டுவன் வட திசைக்கண் வஞ்சி
சூடிச் செல்வேமெனக் கூறும் பொழுது அவனது பெருமிதவுணர்ச்சி புலனாகின்றது; காஞ்சித்திணைக்கும்
வஞ்சித் திணைக்குமுரிய துறைகள் பல ஆண்டு வெளிப்படுத்தப்பெற்றன.)]
|