பக்கம் எண் :

Untitled Document
2. காட்சிக் காதை





185





190
வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதொ றூழி யுலகங் காக்கென
விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்தோர்
கற்கொண்டு பெயருமெங் காவலன் ஆதலின்
வடதிசை மருங்கின் மன்ன ரெல்லாம்

இடுதிறை கொடுவந் தெதிரீ ராயின்
கடற்கடம் பெறிந்த கடும்போர் வார்த்தையும்
விடர்ச்சிலை பொறித்த வியன்பெரு வார்த்தையும்
கேட்டு வாழுமின் கேளீ ராயின்
தோட்டுணை துறக்கும் துறவொடு வாழுமின்

தாழ்கழல் மன்னன் றன்றிரு மேனி
வாழ்க சேனா முகமென வாழ்த்தி
இறையிக லியானை யெருத்தத் தேற்றி
அறைபறை எழுந்ததால் அணிநகர் மருங்கென்.


181
உரை
194

       வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை - (பறை யறைவோர்), அரசர்க்கரசனாய எம் தலைவன் நீடு வாழ்க, ஊழி தோறூழி உலகங் காக்கென - பல ஊழிகளிலும் அவன் இவ்வுல கத்தை நன்கு காப்பானாகவென வாழ்த்தி, வில் தலைக்கொண்ட வியன் பேர் இமயத்து ஓர் கல் கொண்டு பெயரும் எம் காவலன் ஆதலின் - வில்லைத் தன்னிடத்தேயுடைய அகன்ற பெரிய இமய வரையில் கற்புக்கடவுள் பொருட்டால் ஓர் கல்லினைக் கொண்டு மீள்வான் எம் மன்னன் ஆகலான், வடதிசை மருங்கின் மன்னர் எல்லாம் இடுதிறை கொடுவந்து எதிரீர் ஆயின் - வடநாட்டு வேந்தீர் நீவிர் யாவிரும் அவற்கு இடத்தக்க திறையினைக் கொண்டுவந்து கொடுத்து அவன் தலைமையை ஏற்றுக் கொண்மின் அங்ஙனம் ஏற்றுக்கொள்ளீராயின், கடற் கடம்பு எறிந்த கடும்போர் வார்த்தையும் - கடலின்கண் கடம்பின் முதலை வெட்டிய கொடிய போரினைக் குறித்த உரையையும், விடர்ச்சிலை பொறித்த வியன்பெரு வார்த்தையும் - இமயத்துத் தன் வில்லினைப் பொறித்த பெருஞ் செயலைக் குறித்த உரையையும், கேட்டு வாழுமின் - அறிந்து வாழ்மின், கேளீராயின் தோள் துணை துறக்கும் துறவொடு வாழுமின் - அறியீராயின் மனைவி யரை வெறுக்கும் தவத்தினை மேற்கொண்டு வாழுமின் என்று, தாழ் கழல் மன்னன் தன் திருமேனி வாழ்க சேனாமுகம் என வாழ்த்தி - பொருந்திய வீரக்கழலையுடைய அரசனது திருமேனி யாகிய சேனாமுகம் வாழ்க என்று வாழ்த்தி, இறை இகல் யானை எருத்தது ஏற்றி அறை பறை எழுந்தது ஆல் அணிநகர் மருங்கு என் - முரணுடைய அரசுவாவின் பிடரின்கண் ஏற்றி அழகிய வஞ்சிநகரிடத்து அறையும் பறையின் ஒலி மிக்குத் தோன்றியது;

       முதலிலும் இறுதியிலும் அரசனை வாழ்த்துதல் மரபு. தலை - உச்சியுமாம். எதிர்வீர்; அங்ஙனம் எதிரீர் ஆயின் என அறுத்துரைக்க. விடர் - முழைஞ்சு; ஆகுபெயர். வார்த்தை என்றமையால் அவை எங்கணும் பேசப்படும் என்றவாறாயிற்று; கடலைக் கடந்தும் மலையைத் தாண்டியும் வாழுமின் என்றபடி. வாழுமின் என்று என விரிக்க. தாழ்தல் தங்குதல். அரசற்குச் சேனை சிறந்ததாகலின் திருமேனி யென்றார். திருமேனியாகிய சேனாமுகம் வாழ்கவென வாழ்த்தி என்க. இறை யானை - பட்டத்து யானை. பறை - பறை யின் ஒலி. எருத்தத்தேற்றி வாழுமின் (என்று கூறி) வாழ்த்தி அறை பறை எழுந்ததென முடிவு செய்க.

காட்சி - கற்கொள்ள உள்ளத்தால் உறுதி கோடல்.

காட்சிக்காதை முற்றிற்று.