[பறையொலி எழுந்தபின், செங்குட்டுவன், முன்னர் இமயமலையி னின்றும் போந்த முனிவர்கள்
ஆரிய வரசர்களாகிய கனகனும் விசயனும் தமிழரசரை இகழ்ந்தனரெனக் கூறக்கேட்டோனாதலின்
பத்தினிக் கடவுளின் உருச்செய்யும் சிலையினை அவ்வரசர்கள் முடியிலேற்றிக் கொணர்வேன்
என வஞ்சினங் கூறி, வாளினையும் குடையினையும் நன் முழுத்தத்தில் வடதிசையிற் புறப்படச்
செய்து படைத்தலைவர்க்குப் பெருஞ் சோறளித்து விடியற் காலையிற் சிவ பிரான் திருவடிகளைப்
பணிந்து முடிமேற்கொண்டு வஞ்சிமாலை சூடி யானையின் பிடரில் ஏறி நால்வகைத் தானையும்
புடை சூழச் சென்று நீலகிரியை அடைந்தனன்; அடைந்தவன் அவ்விடத்திற் றங்கி இமயத்தினின்றும்
போந்த முனிவர் கூறிய வாழ்த்தினைப் பெற்று, கொங்கணக் கூத்தர் முதலாயினாருடைய கூத்துக்களைக்
கண்டு, பற்பல மன்னர்களும் வரவிடுத்த திறைப் பொருள்களை நோக்கியிருந்து, பின் ஆண்டுநின்றும்
புறப்பட்டுக் கங்கையாற்றை அடைந்து, தன் நட்பரசராகிய நூற்றுவர் கன்னர் கொணர்ந்து
வைத்திருந்த ஓடங்களினால் வடகரை சேர்ந்து பகைவர் நாட்டிற் புக்குப் பாசறை யமைத்
திருந்தனன். அப்பொழுது ஆரிய மன்னர்களாகிய கனக விசயரும் அவர்கட்குத் துணையாக வந்த
உத்தரன் முதலிய பற்பல மன்னரும் 'தமிழரசர் ஆற்றலைக் காண்பேம்' என ஒருங்கு திரண்டு
படையுடன் வந்தெதிர, ஓர் அரியேறு யானைக் கூட்டத்திற் பாய்வதுபோற் செங்குட்டுவன்
அவர்கள்மேற் பாய்ந்து அவர்தம் படைஞர்களைக் கொன்று குவித்து அனைவரையும் வென்று,
தோல்வியுற்றுத் தவ வேடம் முதலியன கொண்டோடிய அவ்வரசர்களைப் பற்றி அகப் படுத்திக்கொண்டு,
அமைச்சனாகிய வில்லவன் கோதையையும் சேனையையும் ஏவி இமயமலையிற் பத்தினிக்குக்
கற் கால்கொண்டனன்.]
|