பக்கம் எண் :


முகவுரை

        குறிப்புக்கள் திவாகரம் முதலிய நிகண்டுகளிற் போந்தவற்றோடு பெரிதும் ஒத்துள்ளன. முதற்கண் உரைத்தவையே பழைய நிகண்டுக ளாலும் அறியலாகாதவை. மேலே கூறிப்போந்த பண், பண்ணியல், திறம், திறத்திறம் என்பன வடமொழியில் சம்பூரணம், சாடவம், ஒளடவம், சதுர்த்தம் என்னும் பெயர்களால் வழங்கப்படுவனவாம். இவை யாவும் தமிழிலே பண்ணென வழங்கப்பெறு மென்பது,

        "நாற்பெரும் பண்ணுஞ் சாதி நான்கும்
        பாற்படு திறனும் பண்ணெனப் படுமே"
        என்னும் பழைய நூற்பாவால் அறியப்படும்.


        திவாகரம், பிங்கலம் என்னும் பழைய நிகண்டுகளும், இராவ் சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதரவர்கள் இசைப்பற்றிய பல கருத்துக் களை அருமுயற்சியுடன் ஆராய்ந்து திரட்டி வெளியிட்ட கருணாமிர்த சாகரம் என்னும் நூலும், உயர்திரு. விபுலானந்தவடிகள் அரிதின் ஆராய்ந்து தமிழ்ப் பொழிலில் வெளியிட்டுவரும் தமிழிசை பற்றிய கட்டுரைகளிற் சிலவும் இந்நூலிலும், இதன் பழைய உரைகளிலு முள்ள இசைப்பகுதியை ஆராய்தற்குத் துணையாயிருந்தன. ஆயின், பண்களின் அலகுநிலை பற்றிய ஆராய்ச்சி இதன்கண் செய்யப்பட் டிலது. அது தனியாக விரித்தெழுதற் பாலதன்றி இவ்வுரையின் கண் விரித்தற் கேற்றதன்று. அதனை ஆராய்ந்தறிய விரும்புவோர் தமிழ்ப்பொழிலிலுள்ள கட்டுரைகளிற் கருத்தினைச் செலுத்துதல் நன்று.

        யான் இவ்வுரையினை எழுதுதற்கு உறு துணையாயிருந்து உதவி புரிந்தோர் நன்னிலம் நாட்டாண்மைக் கழக உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராயிருப்பவரும், திட்பமுள்ள தமிழ்ப் புலமையுடன் நுட்பவறிவுடையாருமாகிய என் இனிய நண்பர், வித்துவான் திரு. செ. சிங்காரவேற் சேதிராயரவர்களாவர், அவர்களுதவியின்றேல் இவ்வளவு விரைவில் இவ்வுரை நிறைவெய்தல் அரிது. தஞ்சை கல்யாண சுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக விருப்பவரும், நாடோறும் தமிழ்ப் பாட்டுக்களை இசையுடன் பாடி என் உள்ளத் தைக் கனிவிப்பவருமாகிய திருவளர்செல்வன் ம. அரங்கநாதன் சிலப் பதிகார மூலம் முழுவதையும் வனப்புற எழுதியுதவினர். தென்னிந் திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் (சென்னைக் கிளை) பொறுப்பாளரும், என் அன்பருமாகிய திருவாளர் வ. சுப்பையா பிள்ளையவர்கள் அடிக்கடி தூண்டி இத்தகைய பணியில் எனக்கு மேன்மேல் ஊக்கத்தை யுண்டாக்கி வருவதுடன் இப்பதிப்பு மிகச் செவ்விய முறையில் வெளிவருமாறுஞ் செய்துள்ளனர்.