பக்கம் எண் :

4. நீர்ப்படைக் காதை

           [இமயத்தினின்றும் கொண்ட பத்தினிக் கல்லைக் கனக விசயரு டைய முடியின் மீதேற்றிச் சென்று கங்கையாற்றில் முறைப்படி நீர்ப்படை செய்து அதன் தென்கரை சேர்ந்து, ஆரிய மன்னர்களால் ஆங்கண் அழகுற அமைக்கப்பெற்ற பாடியின்கண் செங்குட்டுவன் சேனையுடன் தங்கி, போரிலே வீரங்காட்டித் துறக்கமுற்றோரின் மைந்தர்களுக்கும், பகைஞர்களை வென்ற வீரர்களுக்கும் பொன்னாற் செய்த வாகைப் பூவினை யளித்துச் சிறப்பித்திருந்தனன். இருந்தவன் , கங்கையாடி அங்குப் போந்த மாடலனால் கோவலன் வரலாற்றையும், அவன் கொலையுண்டமை கேட்டுப் புகார் நகரிலிருந்த அவன் தந்தை யும் கண்ணகி தந்தையும் துறவுபூண்டதும், இருவர் தாயரும் உயிர் துறந்ததும் முதலியவற்றையும் நெடுஞ்செழியன் துஞ்சிய பின் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் பாண்டி நாட்டை ஆட்சி செய்து வருவதனையும் சோழனது செங்கோல் திரிபின்றி விளங்குவதனையும் கேள்வியுற்று, அவனுக்குச் தன் நிறையாகிய ஐம்பது துலாம் பொன் தானஞ்செய்து. தன்னாற் பற்றுக்கோட் பட்ட கனக விசயரைச் சோழ பாண்டியர்க்குக் காட்டி வருமாறு நீலன் முதலிய கஞ்சுக மாக்களை யேவித் தானையுடன் புறப்பட்டுச் சென்று , தன்னைப் பிரிந்து துயிலின்றி வருந்தியிருக்கும் கோப் பெருந் தேவியின் நெகிழ்ந்த வளை மகிழ்ச்சியாற் செறியும்படி வெண் கொற்றக் குடை நிழற்ற யானைமீ திவர்ந்து வஞ்சி நகரத்திற் புகுந்தனன்]