[காவிரிப்பூம் பட்டினத்திலே கணிகையர் குலத்திற் றோன்றிய
மாதவி யென்பாள் ஆடல் பாடல் அழகு என்னும் மூன்றிலும் சிறந்து விளங்குதற்கேற்றவளாய்
இருந்தமையின், அவளை ஐந்தாம் ஆண்டில் தண்டியம் பிடிப்பித்து, ஏழாண்டு இயற்றுவித்துப்
பன்னீ ராண்டெய்தியபின் அரசற்கு அவை யரங்கேறிக் காட்டலை விரும்பி, ஆடலாசான்,
இசையாசிரியன், இயற்றமிழ்ப் புலவன், தண்ணுமை முதல்வன், குழலோன், யாழாசிரியன்
என்போர் ஒருங்கு கூடி, தக்க நிலத்திலே சிற்பநூண் முறைப்படி இயற்றப்பட்டதும், விளக்குகள்
ஏற்றியும் எழினிகள் வகுத்தும் விதானம் கட்டியும் முத்துமாலை நாற்றியும் புனையப்பட்டதுமாகிய
அரங்கின்கண், மாற்றரசரின் குடைக்காம்பு கொண்டு நவமணி பதித்தியற்றியதும், அரசன்
கோயிலில் வழிபாடு செய்து இருத்தப்பெற்றதுமாகிய தலைக் கோலினை நல்ல நாளிலே பொற்குடத்தேந்தி
வந்த புண்ணிய நன் னீரால் மண்ணிய பின்பு மாலை யணிந்து அரச யானையின் கையிற் கொடுத்தனர்.
பின்பு அவர்கள் அவ்வியானையுடன் அரசனும் ஐம் பெருங்குழுவும் உடன்வர வலமாக வந்து வீதியிலே
தேரின்மிசை நின்ற பாடுவான் கையில் அதனைக் கொடுப்பித்து, நகரியை வலம் வந்து அரங்கிற்
புகுந்து எதிர்முகமாக அதனை வைத்தனர். வைக்க, மாதவியானவள் அரங்கிலே வலக்காலை முன்வைத்து
ஏறி, வலத் தூணைப் பொருந்தி, அரசன் முதலாயினார் அவையில் அமர்ந்தபின் குயிலுவக்
கருவிகளெல்லாம் கூடி நின்றிசைக்க மங்கலமாகிய பாலைப் பண்ணைப் பாடி, தேசியும் வடுகுமாகிய
அகக்கூத்து புறக்கூத்துக்களை நூன்முறை வழுவாது பொன்னா னியன்ற பூங்கொடி நடிப்பதுபோல்
அவினயந் தோன்ற ஆடிக் காட்டினாள். அதனால் அவள் அரசனது பச்சைமாலையும் தலைக்கோற்
பட்டமும் பெற்றதுடன், தலைவரிசை யாக ஆயிரத்தெண்கழஞ்சு பொன் பரியம் பெற்றாள்.
அம் மாலையை ஓர் கூனி கையிற்கொடுத்து 'இம் மாலை ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பெறுவது
; இவ்வளவு பொன் கொடுத்து இதனைப் பெறுவோர் மாதவிக்கு மணமகனாவர்' எனக் கூறி, நகர
நம்பியர் உலா வரும் வீதி யில் நிற்கச் செய்ய, கோவலன் அம் மாலையை வாங்கிக்
கூனியுடன் மாதவி மனையை அடைந்து அவளை அணைந்த அன்றே மயங்கி, தன் மனைவியையும் மனையையும்
மறந்து, மாதவியை ஒருபொழுதும் விட்டு நீங்கா விருப்புடையனாயினன். (இக்காதையில் இசை
நாடகங் களின் இயல்புகளும், அவற்றிற்கு அங்கமானவைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.)]
|