பக்கம் எண் :

3. அரங்கேற்று காதை






5
தெய்வ மால்வரைத் திருமுனி யருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர்

சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய
பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாதவிழ் புரிகுழல் மாதவி தன்னை

1
உரை
7
       தெய்வ மால்வரைத் திருமுனி அருள - தெய்வத் தன்மை யுடைய பெரிய மலையாகிய பொதியிலின்கண் உள்ள அகத்திய முனிவன் அருள் செய்தலால், எய்திய சாபத்து இந்திர சிறுவ னொடு - முன்பு அவனால் எய்திய சாபத்தையுடைய இந்திரன் குமாரனாகிய சயந்தனோடும், தலைக்கோல் தானத்துச் சாபம் நீங் கிய - நாடக அரங்கின் கண்ணே சாபம் நீங்கப் பெற்ற, மலைப் பருஞ் சிறப்பின் வானவர் மகளிர் சிறப்பிற் குன்றாச் செய்கை யொடு பொருந்திய - மாறுபடுத்தலரிய சிறப்பினையுடைய அரம் பையரில் வரிசையிற் குன்றாத நாடகத் தொழிலொடு பொருந் திய உருப்பசியாகிய அம் மாதவி மரபில் வந்த, பிறப்பிற் குன் றாப் பெருந்தோள் மடந்தை - பிறப்பிற் குன்றுத லில்லாத பெரிய தோளையுடைய மடந்தையாகிய, தாது அவிழ் புரிகுழல் மாதவி தன்னை - தாதுவிரியும் பூக்களை யணிந்த கடை குழன்று சுருண்ட கூந்தலையுடைய மாதவியை,

       முனிவருட் சிறந்தோனாகலின் அகத்தியனைத் திருமுனி என்றார். அருள - சாபமிட்டருள வென்றுமாம். தலைக்கோற்றானம் - நாடக வரங்கு. இந்திர சிறுவனொடு சாபம் நீங்கிய உருப்பசி யென்க. 'செய்கையொடு பொருந்திய' என்பதன்பின், உருப்பசியாகிய அம் மாதவி மரபில்வந்த என விரித்துரைக்க. 'சாப நீங்கிய' என்பதன் பின் அங்ஙனம் விரித்துரைத்து, வானவர் மகளிர் என்பதற்குத் தளியிலார் என்று பொருள் கூறுவர் அரும்பதவுரையாசிரியர். சயந்தனும், உருப்பசியும் சாபம் பெற்றதும், அதினீங்கியதுமாகிய வரலாறு பின்னர்க் 1கடலாடு காதையானும், அடியார்க்கு நல்லார் எடுத்துக் காட்டிய பழைய மேற்கோளானும், விளக்கமுறும் ; ஆண்டுக் காண்க. அருளால் என்பதூஉம் பாடம்.

1 சிலப். 6 : 18-25.