பக்கம் எண் :

3. அரங்கேற்று காதை

10

ஏழாண் டியற்றியோர் ஈரா றாண்டிற்
சூழ்கழன் மன்னற்குக் காட்டல் வேண்டி

10
உரை
11

       ஏழாண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி - ஐயாண்டில் தண்டியம் பிடிப் பித்து ஏழாண்டு இயற்றுவித்துப் பன்னீராண்டில் வீரக்கழல் சூழ்ந்த காலினையுடைய அரசற்கு அவனது அவையரங்கேறிக் காட்டலை விரும்பி, தண்டியம் - கோல். மன்னன் - சோழன் கரிகாற்பெருவளத் தான் என்பர் அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும். ஈண்டுக் கரிகாலன் என்று பெயர் கூறப்படாமையானும்,

    "1செருவெங் காதலின் திருமரீ வளவன் புண்ணியத் திசைமுகம் போகிய வந்நாள்"

என இந்திரவிழவூரெடுத்த காதையினும்,

    "2மன்னன் கரிகால் வளவன்நீங் கியநாள் இந்நகர் போல்வதோர் இயல்பின தாகி"


என மணிமேகலை யுள்ளும் கரிகாலன் வடதிசைக்கட் படையெடுத் துச் சென்றமை கூறப்பட் டிருத்தலன்றி, நிகழ்காலத்தில் வைத்து அவன் யாண்டுங் கூறப்படாமையானும், மதுரைக் காண்டத் திறுதிக் கட்டுரையில் பாண்டியன் நெடுஞ்செழியனையும், வஞ்சிக்காண்டத் திறுதிக் கட்டுரையில் சேரன் செங்குட்டுவனையும் கிளந்தோதும் அடி கள் புகார்க் காண்டத் திறுதிக் கட்டுரையில் சோழனொருவனையும் பெயர் குறித்துக் கூறாமையானும் கரிகாலன் அப்பொழுதிருந்தா னென்று துணிதல் சாலாதென்க.

பரதசேனாபதியார் கூறிய, பின்வரும் வெண்பாக்கள் ஈண்டு அறியற்பாலன :

    "பண்ணியம்வைத் தானைமுகன் பாதம் பணிந்துநாட்
    புண்ணிய வோரை புகன்றனகொண்--டெண்ணியே
    வண்டிருக்குங் கூந்தன் மடவரலை ஐயாண்டில்
    தண்டியஞ்சேர் விப்பதே சால்பு"

    "வட்டணையுந் தூசியு மண்டலமும் பண்ணமைய
    எட்டுட னீரிரண்டாண் டெய்தியபின்--கட்டளைய
    கீதக் குறிப்பும் அலங்கார முங்கிளரச்
    சோதித் தரங்கேறச் சூழ்"

    "நன்னர் விருப்புடையோள் நற்குணமு மிக்குயர்ந்தோள்
    சொன்னகுலத் தாலமைந்த தொன்மையளாய்ப்--பன்னிரண்டாண்
    டேய்ந்ததற்பின் ஆடலுடன் பாடலழ கிம்மூன்றும்
    வாய்ந்தவரங் கேற்றல் வழக்கு."

            [ஆடலாசிரியன் அமைதி].


1. சிலப். 5: 89.94.   2. மணி. 1: 39-40.