பக்கம் எண் :

3. அரங்கேற்று காதை





15





20





25
இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோ ராடலும் பாட்டுங் கொட்டும்

விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்தாங்கு
ஆடலும் பாடலும் பாணியுந் தூக்குங்
கூடிய நெறியின கொளுத்துங் காலைப்
பிண்டியும் பிணையலும் எழிற்கையுந் தொழிற்கையுங்
கொண்ட வகையறிந்து கூத்துவரு காலைக்

கூடை செய்தகை வாரத்துக் களைதலும்
வாரஞ் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி

ஆடற் கமைந்த ஆசான் தன்னொடும்

12
உரை
25

       இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து - அகக்கூத்தும் புறக்கூத்துமாகிய இருவகைக் கூத்தினிலக்கணங்களையும் அறிந்து, பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்து - அவற்றின் பகுதிகளாகிய பல கூத்துக்களையும் விலக்குறுப்புக் களுடன் புணர்க்க வல்லனாய், பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும் - அல்லியம் முதற் கொடுகொட்டி யீறாய்க் கிடந்த தெய்வவிருத்தி யாகிய பதினொரு கூத்துக்களையும் அக்கூத்துக் களுக்குரிய பாட்டுக்களையும் அக்கூத்துக்களின் விகற்பங்களுக்கெல்லாம் அமைந்த வாச்சியங்களின் கூறுகளையும், விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து ஆங்கு - விதித்தல் மாட்சிமைப் பட்ட நூலின்வழியே விளங்க வறிந்து, ஆடலும் பாடலும்
பாணியும் தூக்கும் கூடிய நெறியின கொளுத்துங்காலை - ஆடலும் பாடலும் தாளங்களும் தாளங்களின் வழி வரும் தூக்குக்களும் தம்மிற் கூடிய நெறியினவாக நிகழ்த்துமிடத்து, பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும் கொண்டவகை அறிந்து - பிண்டி பிணையல் எழிற்கை தொழிற்கை என்று சொல்லப்பட்ட நான்கினையும் கொள்ளுதற்குரிய வகையினை அறிந்து,கூத்து வருகாலை - இருவகைக் கூத்துக்களும் நிகழு மிடத்து, கூடை செய்த கை வாரத்துக் களைதலும் வாரம்
செய்த கை கூடையிற் களைதலும்-கூடைக் கதியாகச் செய்த கை வாரக் கதியுட் புகாமலும்-வாரக் கதியாகச் செய்த கை கூடைக் கதியுட் புகாமலும் களைதலும், பிண்டி செய்த கை ஆடலிற் களைதலும் ஆடல் செய்த கை பிண்டியிற் களைதலும் - ஆடல் நிகழுங்கால் அவிநயம் நிகழாமலும் அவிநயம் நிகழுங்கால் ஆடல் நிகழாமலும் களைதலும் பேணி, குரவையும் வரியும் விரவல செலுத்தி, குரவைக் கூத்தும் வரிக்கூத்தும் தம்மில் விரவாதபடி செலுத்தி, ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும் - இவ்வாறு ஆடவும் ஆட்டுவிக்கவும் வல்ல ஆடலாசிரியனோடும்;

       அரும்பத வுரையாசிரியரும் அடியார்க்குநல்லாரும் இருவகைக் கூத்து என்பதற்கு இருவகைப்பட்ட அகக்கூத்து என்றும், பலவகைக் கூத்து என்பதற்குப் பலவகைப்பட்ட புற நடங்கள் என்றும் பொருள் கூறினர். அவருள் முன்னவர், ''இருவகைக் கூத்தாவன; தேசி, மார்க்கம் என விவை; 'மார்க்கமென்பது, வடுகின் பெயரே' '' என்றும், பின்னவர், ''இருவகைக் கூத்தாவன; வசைக்
கூத்து, புகழ்க்கூத்து; வேத்தியல், பொதுவியல்; வரிக்கூத்து; வரிச் சாந்திக் கூத்து; சாந்திக் கூத்து, விநோதக் கூத்து; ஆரியம், தமிழ்; இயல்புக் கூத்து, தேசிக் கூத்து; எனப் பலவகைய'' என்றும்,
''ஈண்டு இருவகைக் கூத்தாவன; சாந்தியும், விநோதமும்'' என்றும் விளக்கம் கூறினர். அகக்கூத்தெல்லாம் தேசி, மார்க்கம் என அடங்காமையானும், வசை, வரி, விநோதம் முதலியன அகக்கூத்துள் அடங்காமையானும், இருவகைக் கூத்து என்பதற்கு அகமும் புறமுமாகிய இருவகைக் கூத்து என்றலே பொருத்தமாகும். இரண்டிரண்டாக எடுத்துக்காட்டியவை யெல்லாம் வெவ்வேறியல்பு பற்றி வேறு வேறு பெயரான் வழங்கப்படுவன வன்றி, வெவ்வேறு கூத்துக்களல்ல. இவ்வாற்றால் அவையெல்லாவற்றையும் அகம், புறம் என்றாதல், வேத்தியல், பொதுவியல் என்றாதல், சாந்தி,
விநோதம் என்றாதல் பாகுபடுத்தல் பொருந்தும்.

       வேத்தியல் - அரசர்க் காடுவது. பொதுவியல்-ஏனையோர்க் காடுவது. வேத்தியலை அகமென்றும், பொதுவியலைப் புறமென்றும் கூறுவாருமுளர்.

              ''சாந்திக் கூத்தே தலைவ னின்பம்
              ஏந்திநின் றாடிய வீரிரு நடமவை
              சொக்க மெய்யே யவிநய நாடகம்
              என்றிப் பாற்படூஉ மென்மனார் புலவர்'';

       என்பதனால், சாந்திக்கூத்து நால்வகைப்படும்; அவற்றுள், சொக்கம் என்பது சுத்த நிருத்தம்; ஆவது தாள லயத்தை ஆதாரமாக வுடையது. மெய்க்கூத்து என்பது மெய்த்தொழிற் கூத்து என்றும், அது தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப்படும் என்றும் கூறுவர். இஃது உள்ளக் குறிப்பை ஆதாரமாகக் கொண்டது போலும். அவிநயக் கூத்து என்பது கதை தழுவாது பாட்டின் பொருளுக்குக் கை காட்டி வல்லபஞ் செய்யுங் கூத்து. நாடகம் என்பது கதை தழுவி வருங்கூத்து. இந் நான்கினும் இறுதிக்கண் நின்ற நாடகம் சிறந்ததாதல் ஓர்ந்துணர்க. இவை யாவும் நாயகன் சாந்தமாக ஆடிய கூத்தாகலின் சாந்திக் கூத்தெனப்படும் என்பர்.

       விநோதக் கூத்து என்பதில் குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என்பன அடங்குமென்பர். அவற்றுள்,

        குரவை யென்பது காமமும் வென்றியும் பொருளாக குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது.

       கலிநடம் என்பது கழாய்க் கூத்து.
       குடக்கூத் தென்பது பதினோராடலுள் ஒன்று.
       கரணமாவது படிந்தவாடல்.

       நோக்கென்பது பாரமும் நுண்மையும் மாயமும் முதலாயின வற்றையுடையது.

        தோற்பாவை யென்பது தோலாற்பாவை செய்து ஆட்டுவிப்பது, இன்னும் நகைத்திறச் சுவையுடைய விதூடகக் கூத்தினோடு ஏழென்பாரும், வெறியாட்டு முதலாகத் தெய்வமேறி யாடுங் கூத்தினைக் கூட்டி ஏழென்பாரு முளர். விதூடகக் கூத்து - வசைக் கூத்து; அது வேத்தியல், பொதுவியல் என இரண்டு வகைப்படு மென்பர்.