[வஞ்சியிற்
புகுந்த செங்குட்டுவன் மாலையிலே மதியந் தோன்றிய வளவில் தனது தேவியாகிய வேண்மாளுடன்
அரண்மனை நிலா முற்றத்தை யடைந்து கூத்தச்சாக்கையன் ஆடிய கொட்டிச் சேதம் என்னும்
கூத்தினைக் கண்டு மகிழ்ந்து, பின் அரசியன் மண்டபத்தை யெய்தி யிருந்தனன். அப்பொழுது
நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் வந்து, சோழனிடத்தும் பாண்டியனிடத்தும் தோல்வியுற்ற
ஆரிய வரசர்களோடு தாம் சென்ற காலையில், அவர்கள் 'போரிலே தோற்றுக் கொல்லாக்
கோலம் பூண்டு சென்ற அரசர்களைப் பிடித்து வருதல் பெருமையன்று' என்றிழித்துரைத்தனர்
எனக் கூறக்கேட்டு, மிக்க சினங் கொள்வானாயினன். உடனே மாடலன் எழுந்து, 'அரசே,
செற்றம் தணிக ; இளமையும் யாக்கையும் செல்வமும் நிலையுடையனவல்ல ; மிக உயர்ந்த
பிறப்பினையுற்ற நீ உலகிலே உயிர்கள் போகும் பொதுநெறியிற் செல்லுதல் தகாது ;
அரசர்க்குரியதும் வானவர் போற்றும் வழியை அளிப்பதுமாகிய வேள்வியைத் தாழாதே நீ
செய்தல் வேண்டும்' எனப் பல ஏதுக்களோடும் எடுத்துரைக்கக் கேட்டுச் சினந்தணிந்தவனாய்,
அம் மாடலன் கூறிய வண்ணமே வேள்விக்குரியவற்றை அமைக்குமாறு சிலரை யேவி, ஆரிய வரசர்களைச்
சிறையினின்றும் விடுவித்து, அவர்கட்கு ஏற்றனவுதவுமாறு வில்லவன் கோதைக்குக் கூறி,
சிறைக் கோட்டத்தை இடித்துத் தூய்மை செய்யவும், ஊர்கள் தோறும் குடிகள் செலுத்தும்
வரிகளை வாங்காது தவிர்க்கவும் அழும்பில் வேளை ஆயக்கணக்கரோடு ஏவி, பின்பு ஆன்றோர்
பலருடன் சென்று சிற்ப நூற்றுறைபோய கம்மியர்களால் இயற்றப்பட்ட கோயிலில் இமயச்
சிலையால் இயற்றப்பட்டுள்ள படிமத்திலே பத்தினிக் கடவுளாகிய கண்ணகியைப் பிரதிட்டை
செய்து அங்கிருந்தனன் செங்குட்டுவன்.]
|