பலவகைக்
கூத்தும் என்றது மேலே கூறப்பட்ட அகக்கூத்து முதலியவற்றுடன் வென்றிக் கூத்தும், வசைக்கூத்து
மாகும். ''பல்வகை யென்பது பகருங்காலை, வென்றி வசையே விநோத மாகும்'' என்பதொரு
சூத்திரங்காட்டுவர். அவற்றுள், ''மாற்றா னொடுக்கமும் மன்ன னுயர்ச்சியும். மேற்படக்
கூறும் வென்றிக் கூத்தே'' எனவும், ''பல்வகை யுருவமும் பழித்துக் காட்ட, வல்ல னாதல்
வசையெனப் படுமே'' எனவும் வென்றி, வசைக் கூத்துகட்கு இலக்கணங் கூறுவர்.
விலக்கினின் - விலக்குறுப்போடு;
வேற்றுமை மயக்கம். விலக்குறுப்பு என்ற சொற்குப் பொருள், வேந்து விலக்கு, படை விலக்கு,
ஊர்விலக்கு என்னும் விலக்குக்களாகிய பாட்டுக்களுக்கு உறுப்பாய் வருவது என்றும், தலைவன்
செலுத்துகின்ற கதையை விலக்கியும் அக் கதையை நடாத்தியும் முன்பு செய்த கதைக்கே உறுப்பாகுவது
என்றும் கூறுவர்;
''விலக்குறுப் பென்பது விரிக்குங்
காலைப்
பொருளும் யோனியும் விருத்தியுஞ்
சந்தியும்
சுவையுஞ் சாதியுங் குறிப்புஞ்
சத்துவமும்
அவிநயஞ் சொல்லே சொல்வகை
வண்ணமும்
வரியுஞ் சேதமும் உளப்படத்
தொகைஇ
இசைய வெண்ணி னீரே ழுறுப்பே''
என்னுஞ் சூத்திரத்தால், விலக்குறுப்புக்கள் பதினான்கு வகையினவாதல் பெறப்படும்.
இப்பதினான்கனுள் பொருள், சாதி,
யோனி, விருத்தி என்னும் நான்கும் ஒருவகையும், சுவை, குறிப்பு, சத்துவம், அவிநயம்
என்னும் நான்கும் ஒருவகையும், சொல், சொல்வகை, வண்ணம், வரி என்னும் நான்கும்
ஒருவகையும், சந்தி. சேதம் என்னும் இரண்டும் ஒருவகையுமாகப்
பாகுபடும்.
அவற்றுள், பொருள் நான்கு
வகைப்படும்; அவை - அறம், பொருள், இன்பம், வீடு என்பன. இவை நாடகத்திற் கூடியும்
குறைந்தும் வருமிடத்து நாடகம், பிரகரணப் பிரகரணம், பிரகரணம், அங்கம் எனப்
பெயர் வேறுபடும். அறமுதல் நான்கும் அமைந்தது முதலதும், அறம் பொருள் இன்பம் அமைந்தது
இரண்டாவதும், அறம் பொருள் அமைந்தது மூன்றாவதும், அறமொன்றும் அமைந்தது நான்காவதும்
ஆம்; இவை நான்கும் நாடகமே.இவைதாம் முறையே அந்தணர் முதலிய
சாதிகளாகவும் கூறப்படும்.
யோனியாவது பொருள் தோன்றுமிடம்.
உள்ளோன் தலைவனாக உள்ளதோர் பொருண்மேற் செய்தலும். இல்லோன் தலைவனாக உள்ளதோர்
பொருண்மேற் செய்தலும், உள்ளோன் தலைவனாக இல்லதோர் பொருண்மேற் செய்தலும், இல்லோன்
தலைவனாக
இல்லதோர் பொருண்மேற் செய்தலும் என அது நான்கு வகைப்படும்; என்னை?
''உள்ளோற் குள்ளதும் இல்லோற்
குள்ளதும்
உள்ளோற் கில்லதும் இல்லோற்
கில்லதும்
எள்ளா துரைத்தல் யோனி
யாகும்''
என்றாராகலின்.
விருத்தியாவது
நாடகத்தின் இயல்பு அல்லது தன்மை. சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி என விருத்தி
நால்வகைப்படும். அவற்றுள், சாத்துவதி யென்பது அறம் பொருளாகத் தெய்வமானிடர்
தலைவராக வருவது. ஆரபடி யென்பது பொருள் பொருளாக வீரராகிய மானிடர் தலைவராக
வருவது. கைசிகி யென்பது காமம் பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வருவது.
பாரதியாவது கூத்தன் தலைவனாக நடன் நடி பொருளாகக் காட்டியும் உரைத்தும் வருவது.
சுவை ஒன்பது வகைப்படும்; அவை - வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம்,
அவலம், வெகுளி, நகை, சமனிலை என்பன. வேம்பென்னும் பொருளும் நாவென்னும் பொறியும்
கூடியவழி நாவால் உணரப்படும் கைப்புச் சுவை போலச் சுவைக்கப்படும் பொருளும் அதனைச்
சுவைக்கும் பொறியுங் கூடியவழிப் பிறக்கும் பொறியுணர்வு சுவையெனப்படும்.
குறிப்பாவது அச் சுவை யுணர்வு
மனத்துப் பட்டவழி உள்ளத்தே நிகழும் குறிப்பாகும்.
சத்துவமாவது உள்ளத்து நிகழுங்
குறிப்பினுக் கேற்ப உடம் பின்கண் நிகழும் வேறுபாடு. இது விறல் எனவும் படும். மெய்ம்
மயிர் சிலிர்த்தல், கண்ணீர் வார்தல், 1நடுக்கமடுத்தல்,
வியர்த்தல்.
தேற்றம், களித்தல், விழித்தல், வெதும்பல், சாக்காடு, குரற்சிதைவு எனச் சத்துவம்
பத்து வகைப்படும் என்பர். வடநூலார் சத்துவத்தை எண்வகைப்படுத்துச் சிறிது வேறுபட வுரைப்பர்.
சுவைப்பொருள்,
பொறியுணர்வு, குறிப்பு, விறல் என்னும் நான்குங் கூடியபொழுது சுவை யென்னும்
மெய்ப்பாடு தோன்றும்.
ஒன்பான் சுவைகட்குரிய விறல்கள்
அவ்வச் சுவை யவிநயங்கள் எனவும் படும். அவற்றைப் பின்வருஞ் சூத்திரங்களால் அறிக.
''வீரச்சுவை யவிநயம் விளம்புங்காலை,
முரிந்தபுருவமுஞ் சிவந்த கண்ணும், பிடித்த வாளுங் கடித்த வெயிறும், மடித்த வுதடுஞ் சுருட்டிய
நுதலும், திண்ணென வுற்ற சொல்லும் பகைவரை, எண்ணல் செல்லா விகழ்ச்சியும் பிறவும்.
நண்ணு மென்ப நன்குணர்ந்தோரே.''
''அச்சு
வவிநயம் ஆயுங் காலை, ஒடுங்கிய வுடம்பும் நடுங்கிய நிலையும்,
மலங்கிய கண்ணுங் கலங்கிய வுளனும், கரந்துவர லுடைமையுங்
கையெதிர் மறுத்தலும், பரந்த நோக்கமு மிசைபண் பினவே.''
''இழிப்பி னவிநயம் இயம்புங் காலை, இடுங்கிய கண்ணு
மெயிறுபுறம் போதலும், ஒடுங்கிய முகமு முஞற்றாக் காலும், சோர்ந்த
யாக்கையுஞ் சொன்னிரம் பாமையும், நேர்ந்தன வென்ப நெறியறிந்தோரே.''
அற்புத வவிநயம் அறிவரக் கிளப்பின், சொற்சோர் வுடையது
சோர்ந்த கையது, மெய்ம்மயிர் குளிர்ப்பது வியத்தக வுடையது, எய்திய
திமைத்தலும் விழித்தலு மிகவாதென், றையமில் புலவ ரறைந்தன
ரென்ப.''
''காம வவிநயங் கருதுங் காலைத், தூவுள் ளுறுத்த வடிவுந் தொழிலும்,
காரிகை கலந்த கடைக்கணுங் கவின்பெறு, மூரன் முறுவல்
சிறுநிலா வரும்பலும், மலர்ந்த முகனு மிரந்தமென் கிளவியும்,
கலந்தன பிறவுங் கடைப்பிடித் தனரே''
''அவலத் தவிநயம் அறிவரக் கிளப்பின், கவலையொடு புணர்ந்த
கண்ணீர் மாரியும், வாடிய நீர்மையும் வருந்திய செலவும், பீடழியிடும்பையும்
பிதற்றிய சொல்லும், நிறைகை யழிதலும் நீர்மையில்
கிளவியும், பொறையின் றாகலும் புணர்த்தினர் புலவர்.''
''வெகுளிச்சுவை யவிநய'' த்தை உணர்த்துஞ் சூத்திரம் சிதைந்து
விட்டது. ''கைபிசையா வாய்மடியாக் கண்சிவவா வெய்துயிரா,
மெய்குலையா வேரா வெகுண்டெழுந்தான்'' என்னும் தண்டியலங்
கார மேற்கோளால் அதனையறிக.
''நகையி னவிநயம் நாட்டுங் கா ''நாட்டுங் காலை நடுவுநிலை யவிநயம், கோட்பா டறியாக்
கொள்கையு மாட்சியும், அறந்தரு நெஞ்சமும் ஆறிய விழியும்,
பிறழ்ந்த காட்சி நீங்கிய நிலையும், குறிப்பின் றாகலுந் துணுக்க
மில்லாத், தகைமிக வுடைமையுந் தண்ணென வுடைமையும், அளத்
தற் கருமையு மன்பொடு புணர்தலும், கலக்கமொடு புணர்ந்த நோக்
குங் கதிர்ப்பும், விலக்கா ரென்ப வேண்டுமொழிப் புலவர்.''
அவிநயம் என்பது பாவகம். முற்குறித்த சுவைநிலை யவிநயங்க
ளன்றி வேறு ,இருபத்து நான்கு அவிநயங்கள் உள. அவை;
வெகுண்டோன் அவிநயம், ஐயமுற்றோன் அவிநயம், சோம்பினோன்
அவிநயம், களித்தோன் அவிநயம், உவந்தோன் அவிநயம், அழுக்கா
றுடையோன் அவிநயம், இன்பமுற்றோன் அவிநயம், தெய்வமுற்றோன்
அவிநயம், ஞஞ்ஞையுற்றோன் அவிநயம், உடன்பட்டோன்
அவிநயம், உறங்கினோன் அவிநயம், துயிலுணர்ந்தோன் அவிநயம்,
செத்தோன் அவிநயம், மழை பெய்யப்பட்டோன் அவிநயம், பனித்
தலைப்பட்டோன் அவிநயம் வெயிற்றலைப்பட்டோன் அவிநயம்,
நாணமுற்றோன் அவிநயம், வருத்தமுற்றோன் அவிநயம், கண்ணோ
வுற்றோன் அவிநயம், தலைநோவுற்றோன் அவிநயம், அழற்றிறம்பட்டோன்
அவிநயம், சீதமுற்றோன் அவிநயம, வெப்பமுற்றோன்.
அவிநயம், நஞ்சுண்டோன் அவிநயம் என்பன. இவை யனைத்திற்கும்
அடியார்க்கு நல்லார் காட்டிய நூற்பாக்கள் வருமாறு;
''வெகுண்டோன் அவிநயம் விளம்புங் காலை, மடித்த வாயு
மலர்ந்த மார்புந், துடித்த புருவமுஞ் சுட்டிய விரலும், கன்றின
உள்ளமொடு கைபுடைத் திடுதலும், அன்ன நோக்கமோ டாய்ந்தனர்
கொளலே'';
''பொய்யில் காட்சிப் புலவோர் ஆய்ந்த, ஐய முற்றோன் அவிநயம்
உரைப்பின், வாடிய உறுப்பும் மயங்கிய நோக்கமும், பீடழி புலனும்
பேசா திருத்தலும், பிறழ்த செய்கையும் வான்றிசை நோக்கலும்,
அறைந்தனர் பிறவும் அறிந்திசி னோரே.'' ;
''மடியின் அவிநயம் வகுக்குங் காலை, நொடியொடு பலகொட்
டாவிமிக வுடைமையும், மூரி நிமிர்த்தலும் முனிவொடு புணர்தலுங்,
காரண மின்றி யாழ்ந்துமடிந் திருத்தலும், பிணியு மின்றிச் சோர்ந்த
செலவோ, டணிதரு புலவர் ஆய்ந்தன ரென்ப'' ;
''களித்தோன் அவிநயம் கழறுங் காலை, ஒளித்தவை ஒளியான்
உரைத்த லின்மையும், கவிழ்ந்துஞ் சோர்ந்துந் தாழ்ந்துந் தளர்ந்தும்,
வீழ்ந்த சொல்லொடு மிழற்றிச் சாய்தலும், களிகைக் கவர்ந்த
கடைக்கணோக் குடைமையும், பேரிசை யாளர் பேணினர்கொளலே'' ;
''உவந்தோன் அவிநயம் உரைக்குங் காலை, நிவந்தினி தாகிய
கண்மல ருடைமையும், இனிதி னியன்ற உள்ள முடைமையும்
முனிவி னகன்ற முறுவனகை யுடைமையும், இருக்கையுஞ் சேறலுங்
கானமும் பிறவும், ஒருங்குட னமைந்த குறிப்பிற் றன்றே'' ;
''அழுக்கா றுடையோன் அவிநயம் உரைப்பின், இழுக்கொடு
புணர்ந்த இசைப்பொரு ளுடைமையுங், கூம்பிய வாயுங் கோடிய
உரையும், ஓம்பாது விதிர்க்கும் கைவகை யுடைமையும், ஆரணங்காகிய
வெகுளி உடைமையுங், காரண மின்றி மெலிந்தமுக முடைமையு,
மெலிவொடு புணர்ந்த இடும்பையு மேவரப், பொலியு மென்ப
பொருந்து மொழிப் புலவர்'' ;
''இன்பமொடு புணர்ந்தோன் அவிநயம் இயம்பின், துன்பம் நீங்கித்
துவர்த்த யாக்கையுந், தயங்கித் தாழ்ந்த பெருமகிழ் வுடைமையும்,
மயங்கி வந்த செலவுநனி யுடைமையும், அழகுள் ளுறுத்த
சொற்பொலி வுடைமையும், எழிலொடு புணர்ந்த நறுமல ருடைமையும்,
கலங்கள்சேர்ந் தகன்ற தோண்மார் புடைமையும், நலங்கெழு
புலவர் நாடின ரென்ப'' ;
2''தெய்வ முற்றோன் அவிநயம் செப்பிற்,
கைவிட். டெறிந்த
கலக்க முடைமையும், மடித்தெயிறு கௌவிய வாய்த்தொழி
லுடைமையும், துடித்த புருவமுந் துளங்கிய நிலையுஞ், செய்ய முகமுஞ்
சேர்ந்த செருக்கும், எய்து மென்ப இயல்புணர்ந் தோரே'' ;
3 ''ஞஞ்ஞை யுற்றோ னவிநயம் நாடில், பன்மென்
றிறுகிய
நாவழி வுடைமையும், நுரை சேர்ந்து கூம்பும் வாயும் நோக்கினர்க்,
குரைப்போன் போல உணர்வி லாமையும், விழிப்போன் போல
விழியா திருத்தலும், விழுத்தக வுடைமையும் ஒழுக்கி லாமையும்
வயங்கிய திருமுகம் அழுங்கலும் பிறவும், மேவிய தென்ப விளங்கு
மொழிப் புலவர்'' ;
''சிந்தையுடம் பட்டோன் அவிநயம் தெரியின், முந்தை யாயினும்
உணரா நிலைமையும், பிடித்த கைமேல் அடைத்த கவினும்,
முடித்த லுறாத கரும நிலைமையுஞ், சொல்வது யாதும் உணரா நிலைமையும்,
புல்லு மென்ப பொருந்துமொழிப் புலவர்'' ;
''துஞ்சா நின்றோன் அவிநயம் துணியின், எஞ்சுதலின்றி இரு
புடை மருங்கு, மலர்ந்துங் கவிழ்ந்தும் வருபடை யியற்றியு, மலர்ந்துயிர்ப்
புடைய ஆற்றலு மாகும்'' ;
''இன்னுயி லுணர்ந்தோன் அவிநயம் இயம்பின், ஒன்றிய குறுங்
கொட்டாவியும் உயிர்ப்புந், தூங்கிய முகமுந் துளங்கிய உடம்பும்,
ஓங்கிய திரிபும் ஒழிந்தவுங் கொளலே'' ;
''செத்தோன் அவிநயம் செப்புங் காலை, அத்தக அச்சமும் அழிப்பும்
ஆக்கலும், கடித்த நிரைப்பலின் வெடித்துப் பொடித்துப்,
''வெப்பின் அவிநயம் விரிக்குங் காலைத், தப்பில் கடைப்பிடித்
போந்ததுணி வுடைமையும் வலித்த உறுப்பும், மெலிந்த வகடு மென்மைமிக
வுடைமையும், வெண்மணி தோன்றக் கருமணி கரத்தலும்
உண்மையிற் புலவர் உணர்ந்த வாறே'' ;
''மழை பெய்யப் பட்டோன் அவிநயம் வகுக்கின், இழிதக
வுடைய இயல்புநனி யுடைமையும், மெய்கூர் நடுக்கமும் பிணித்தலும்
படாத்தை, மெய்பூண் டொடுக்கிய முகத்தொடு புணர்த்தலும்,
ஒளிப்படு மன்னி லுலறிய கண்ணும், விளியினுந் துளியினு மடிந்த
செவி யுடைமையுங், கொடுகிவிட் டெறிந்த குளிர்மிக வுடைமையும்,
நடுங்கு பல்லொலி யுடைமையு முடியக் கனவுகண் டாற்றா னெழுதலு
முண்டே'' ;
''பனித்தலைப் பட்டோன் அவிநயம் பகரின், நடுக்க முடைமையும்
நகைபடு நிலைமையுஞ், சொற்றளர்ந் திசைத்தலு மற்றமி லவதியும்,
போர்வை விழைதலும் புந்திநோ வுடைமையும், 4 நீறாம் விழியுஞ்
சேறு முனிதலும், இன்னவை பிறவும் இசைந்தனர் கொளலே'' ;
''உச்சிப் பொழுதின் வந்தோன் அவிநயம், எச்ச மின்றி இயம்புங்காலைச்,
சொரியா நின்ற பெருந்துய ருழந்து, தெரியா நின்ற உடம்
பெரி யென்னச், சிவந்த கண்ணும் அயர்ந்த நோக்கமும், பயந்த
தென்ப பண்புணர்ந் தோரே'' ;
''நாண முற்றோன் அவிநயம் நாடின், இறைஞ்சிய தலையும்
மறைந்த செய்கையும், வாடிய முகமுங் கோடிய உடம்புங், கெட்ட
வொளியுங் கீழ்க்கண் ணோக்கமும், ஓட்டின ரென்ப உணர்ந்திசி
னோரே'';
''வருத்த முற்றோன் அவிநயம் வகுப்பிற், பொருத்த மில்லாப்
புன்க ணுடைமையுஞ், சோர்ந்த யாக்கையுஞ் சோர்ந்த முடியுங்
கூர்ந்த வியர்வுங் குறும்பல் லுயாவும், வற்றிய வாயும் வணங்கிய
உறுப்பும், உற்ற தென்ப உணர்ந்திசி னோரே'' ;
''கண்ணோ வுற்றோன் அவிநயம் காட்டி, னண்ணிய கண்ணீர்த்
துளிவிரல் தெறித்தலும், வளைந்தபுரு வத்தொடு வாடிய முகமும்,
வெள்ளிடை நோக்கின் விழிதரு மச்சமுந், தெள்ளிதிற் புலவர்
தெளிந்தனர் கொளலே'' ;
''தலைநோ வுற்றோன் அவிநயம் சாற்றின், நிலைமை யின்றித் தலையாட்
டுடைமையுங், கோடிய விருக்கையுந் தளர்ந்த வெரொடு, பெருவிர
லிடுக்கிய நுதலும் வருந்தி, ஒடுங்கிய கண்ணொடு பிறவுந்,
திருந்து மென்ப செந்நெறிப் புலவர்'' ;
''அழற்றிறம் பட்டோன் அவிநயம் உரைப்பின், நிழற்றிறம் வேண்டும்
நெறிமையின் விருப்பும், அழலும் வெயிலுஞ் சுடரும் அஞ்சலும்,
நிழலும் நீருஞ் சேறு முவத்தலும், பனிநீ ருவப்பும் பாதிரித்
தொடையலும், நுனிவிர லீர மருநெறி யாக்கலும், புக்க துன்போடு
புலர்ந்த யாக்கையுந், தொக்க தென்ப துணிவறிந் தோரே'' ;
''சீத முற்றோன் அவிநயம் செப்பின், ஓதிய பருவர லுள்ளமோ
டுழத்தலு, மீர மாகிய போர்வை யுறுத்தலு, மார வெயிலுழந் தழலும்
வேண்டலு, முரசியு முரன்று முயிர்த்து முரைத்தலுந், தக்கன பிறவுஞ்
சாற்றினர் புலவர்'' ;
''வெப்பின் அவிநயம் விரிக்குங் காலைத், தப்பில் கடைப்பிடித் தன்மையுந் தாகமும், எரியினன்ன வெம்மையோ டியைவும், வெருவரு மியக்கமும் வெம்பிய விழியும், நீருண் வேட்கையு நிரம்பா
வலியும், ஓருங் காலை உணர்ந்தனர் கொளலே'' ; ''கொஞ்சிய மொழியிற் வாயிற் பனிநுரை கூம்பலுந், தஞ்ச மாந்தர் தம்முக நோக்கியோர், இன்சொ லியம்புவான் போலியம் பாமையும், நஞ்சுண் டோன்றன் அவிநயம் என்ப'' ;
''சொல்லிய வன்றியும் வருவன வுளவெனிற், புல்லுவழிச்
சேர்த்திப் பொருந்துவழிப் புணர்ப்ப.''
இனி, சொல் என்னும் உறுப்பு மூன்று வகைப்படும். அவை;
உட்சொல், புறச்சொல், ஆகாயச் சொல் என்பன. நெஞ்சொடு
கூறல் உட்சொல்லும், கேட்போர்க் குரைத்தல் புறச்சொல்லும்,
தானே கூறல் ஆகாயச்சொல்லும் ஆம்.
சொல்வகை நான்கு வகைப்படும். அவை; சுண்ணம், சுரிதகம்,
வண்ணம், வரிதகம் என்பன. அவற்றுள், சுண்ணம் நான்கடியான்
வருவது; சுரிதகம் எட்டடியான் வருவது; வண்ணம் பதினாறடியான்
வருவது; வரிதகம் முப்பத்திரண்டடியான் வருவது.
வண்ணமானது ஒரு வகையான் பெருவண்ணம், இடைவண்ணம்,
வனப்பு வண்ணமென மூன்று வகைப்படுமென்றும், அவற்றுள்,
பெருவண்ணம் ஆறாயும், இடைவண்ணம் இருபத்தொன்றாயும்,
வனப்புவண்ணம் நாற்பத்தொன்றாயும் வருமென்றுங் கூறுவர். ஆசிரியர்
தொல்காப்பியனார் 5 இருபது வண்ணங் கூறினர். நூறுவண்ணங்
கூறினாருமுளர்.
வரியாவது; வரிக்கூத்துக்குரிய பாடல்.
''வரிப்பாடலாவது; பண்ணும், திறமும், செயலும், பாணியும்
ஒரு நெறியன்றி மயங்கச் சொல்லப்பட்ட எட்டனியல்பும், ஆறனியல்பும்
பெற்றுத், தன் முதலும் இறுதியுங் கெட்டு, இயல்பும்
முடமுமாக முடிந்து, கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும்
பெறாதும் வரும்'' என்றும், ''அதுதான், தெய்வஞ் சுட்டியும் மக்களைப்
பழிச்சியும் வரும்'' என்றும் கூறுவர் அரும்பதவுரையாசிரியர்,
வரிப்பாட்டுக்கள் திணைநிலை வரி, கிணைநிலைவரி எனவும், முகமுடை
வரி, முகமில் வரி, படைப்பு வரி எனவும், அவை பலவாகவும் பாகு
பாடெய்தும். அவற்றினியல்பெல்லாம், பின்னர், கானல்வரி யுள்ளும்,
வேனிற்காதையுள்ளும் விளங்கலுறும்.
இனி, சந்தி யென்பது நாட்டியக் கட்டுரையின் பிரிவுகள் ஒன்றோடொன்று
தொடர்ந்து நிற்கும் நிலை. அது, முகம், பிரதிமுகம்,
கருப்பம், விளைவு, துய்த்தல் என ஐவகைப்படும். அவற்றுள் முகமா
வது எழுவகைப்பட்ட உழவினாற் சமைக்கப்பட்ட பூமியுள் இட்ட
வித்துப் பருவஞ் செய்து முளைத்து முடிவது போல்வது; பிரதிமுகமா
வது அங்ஙனம் முளைத்தல் முதலாய் இலைதோன்றி நாற்றாய் முடி
வது போல்வது; கருப்பமாவது அந் நாற்று முதலாய்க் கருவிருந்து
பெருகித் தன்னுட் பொருள் பொதிந்து கருப்பமுற்றி நிற்பது போல்
வது; விளைவாவது கருப்ப முதலாய் விரிந்து கதிர் திரண்டிட்டுக்
காய் தாழ்ந்து முற்றி விளைந்து முடிவது போல்வது; துய்த்தலாவது
விளையப்பட்ட பொருளை அறுத்துப் போரிட்டுக் கடாவிட்டுத் தூற்றிப்
பொலி செய்து கொண்டுபோய் உண்டு மகிழ்வது போல்வது.
வித்து, நாற்று, கரு, விளைவு, துய்த்தல் என்பன ஒன்றினொன்று
தொடர்ந்து முடிதல்போல நாடகத்திற்குரிய கதை ஐந்து பகுதியாய்
ஒன்றினொன்று தொடர்ந்து முடியவேண்டும் என்றபடி. இவ்வுறுப்பு
நாடகத்திற் கின்றியமையாத தொன்றென்க.
சேதம் என்பது ஆதிக் கதையை ஆரியம், தமிழ் என்னும் இருவகைக்
கூத்திற்கேற்பச் சேதித்திடுவது என்பர்;
''ஆரியத் தமிழெனுஞ் சீர்நட மிரண்டினும்
ஆதிக் கதையை யவற்றிற் கொப்பச்
சேதித் திடுவது சேதமென் றாகும்.''
என்பது காண்க. ''விலக்கினிற் புணர்த்து'' என்பதனாற் குறிக்கப்பட்ட
விலக்குறுப்புக்கள் இதுகாறும் உணர்த்தப்பட்டன
|