பக்கம் எண் :

5. நடுகற் காதை


230

வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக்
கடவுண் மங்கலம் செய்கென ஏவினன்
வடதிசை வணக்கிய மன்னவ ரேறென்.


229
உரை
234

       வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டி - கைத்தொழில் வல்லார் செய்த சிறந்த அழகினையுடைய அணிகலன்களை முழுவதும் அணிந்து, பூப்பலி செய்து - அருச்சனை செய்து, காப்புக் கடை நிறுத்தி - திசைக் கடவுளரைக் கடைவாயிலினிறுத்தி, வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்து-ஓமமும் விழவும் நாள்தோறும் வகை பெறச்செய்து, கடவுள் மங்கலஞ் செய்கென ஏவினன் வட திசை வணக்கிய மன்னவர் ஏறு என்-பிரதிட்டை செய்கவென்று ஏவினான் வடநாட்டு மன்னரை வணங்கச் செய்த வேந்தர் பெருமானாகிய செங்குட்டுவன் என்க.

       வேள்வி - ஓமம். கடவுள் மங்கலம் - பிரதிட்டை. மன்னவரேறு நங்கையைப் பத்தினிக் கோட்டத்துத் தெய்வப்படிமத்துக் கடவுண் மங்கலஞ் செய்கென ஏவினன் என முடிக்க.

இது நிலைமண்டில வாசிரியப்பா.

நடுகற் காதை முற்றிற்று.