பக்கம் எண் :


7. வரந்தரு காதை

              [பின்னர், மணிமேகலையின் துறவு வரலாற்றைத் தேவந்தி சொல்லக் கேட்ட செங்குட்டுவன், அவள்மேல் ஆவேசித்த சாத்த னென்னும் தெய்வத்தின் கட்டளையால் மாடலன் தன் கையிலுள்ள கரகநீரை அங்கு வந்திருந்த சிறுமியர் மூவர்மீதுந் தெளிப்ப, உடனே கண்ணகியைக் குறித்துப் புலம்பிய அம் மூவரையும் கண்ணகி நற்றாய் கோவலன் நற்றாய் மாதரி யென்னும் மூவருடைய பிறப்பினராக அறிந்து, அன்னோர் அங்ஙனம் பிறத்தற்குரிய காரணத்தை மாடலன் கூறக் கேட்டுப் பத்தினிக் கடவுளின் பூசனை முதலியவற்றிற்குப் படிப்புறம் வகுத்து, பத்தினிக் கடவுட்குப் பூ முதலியன கொண்டு நாடோறும் வழிபாடு நிகழ்த்துமாறு தேவந்திக்குச் சொல்லி, தான் அக்கடவுளை மும்முறை வலம்வந்து வணங்கி நின்றான்; அப்பொழுது ஆரியவரசரும் குடகக் கொங்கரும் மாளவ வேந்தரும் இலங்கை யரசனாகிய கயவாகுவும் அங்கு வந்து அக் கடவுளை நோக்கி, 'யாங்கள் எங்கள் நாட்டிற் செய்யும் வேள்வியினும் வந்து அருள்செய்க' வென வணங்கி வேண்ட, அப்பொழுது 'நீங்கள் விரும்பியவாறே வரந்தந்தேன்' என ஒரு குரல் உண்டாயது. அது கேட்ட செங்குட்டுவனும் ஏனை யரசர்களும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். பின்பு செங்குட்டுவன் மாடலனோடு வேள்விச்சாலைக்குச் செல்ல, இளங்கோவடிகள் கண்ணகி கோயிலுக்குச் சென்றார்; அவர்முன் பத்தினிக் கடவுள் தேவந்திமேல் தோன்றி, அவருடைய துறவின் வரலாற்றைச் சொல்லி உவப்பித்தாள். (இளங்கோவடிகள் இக்காப்பியத்தின் தெளி பொருளாகவுள்ள அறங்களை உலகத்தாருக்குக் கூறி இதனை முடித்திருப்பது அவர் இதனை யியற்றியதன் குறிக்கோளை இனிது புலப்படுத்தும்.)]