பக்கம் எண் :


7. வரந்தரு காதை






50


கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் றன்முன்
கடவுண் மங்கலங் காணிய வந்த
மடமொழி நல்லார் மாணிழை யோருள்
அரட்டன் செட்டிதன் ஆயிழை ஈன்ற

இரட்டையம் பெண்கள் இருவரு மன்றியும்
ஆடக மாடத் தரவணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்குளள



46
உரை
52

       கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் தன்முன்-கொய்த தளிர் இடையிட்டுத் தொடுத்த குறிஞ்சி மலர்மாலை சூடிய செங் குட்டுவன் எதிரே, கடவுள் மங்கலம் காணிய வந்த மடமொழி நல்லார் மாண் இழையோருள் - கண்ணகி பிரதிட்டையைக் கண்டு வணங்கப் போந்த மென சொற்களையுடையராகிய மாட்சிமைப்பட்ட அணிகலன் அணிந்த மகளிருள், அரட்டன் செட்டி தன் ஆயிழை ஈன்ற இரட்டையம் பெண்கள் இருவரும் அன்றியும் - அரட்டன் செட்டியின் மனைவி பெற்ற இரட்டையாகத் தோன்றிய மகளிர் இருவரும் அன்றியும், ஆடகமாடத்து அரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்கு உளள் - திருவனந்தபுரத்து அராவணையிற் பள்ளிகொண்ட திருமாற்குத் தொண்டு செய்யுங் குடும்பத்தை யுடையானது சிறிய மகளாயினாளும் இவ்விடத்துள்ளாள் ;

       குறிஞ்சிக் கோமான் - மலைநாட்டரசன் எனக் கொண்டு, கொய் தளிர் என்பதனைக் குறிஞ்சியாகிய இடத்து நிகழ் பொருளுக்கு அடையாக்கினும் அமையும். காணிய, செய்யியவென்னும் வினையெச்சம். ஆடகமாடம் - திருவனந்தபுரம் ; இரவிபுரம் என்பாருமுளர். சேடன் - அடியவன் ; திருவடி பிடிப்பான் எனலுமாம்.