இந்நூலாசிரியராகிய இளங்கோவடிகள் சேரநாட்டிலே வஞ்சி நகரத்திருந்து அரசுபுரிந்த சேரலாதன்
என்னும் வேந்தற்கு மைந்தரும் சேரன் செங்குட்டுவற்குத் தம்பியுமாவர். இளங்கோவாகிய
இவர் துறவு பூண்டமையால் இளங்கோவடிகள் எனப்பெற்றார். இவர் வஞ்சிமூதூர் மணி மண்டபத்திலே
தந்தையுடன் இருக்கும் போது ஆண்டுப்போந்த நிமித்திகனொருவன் இவரை நோக்கி அரசு
வீற்றிருக்கும் இலக்கண முண்டென்று சொல்ல, தமையனாகிய செங்குட்டுவனிருக்க இவ்வாறு
முறைமை கெடச் சொன்னா யென்று அந்நிமித்திகனை வெகுண்டு நோக்கி, செங்குட்டுவற்குத்
துன்பமுண்டா காதபடி குணவாயிற் கோட்டத்திலே துறவுபூண்டு பேரின்பவீடாகிய அரசினை ஆளுதற்குரியவரா
யிருந்தனர். இவ்வரலாறு பத்தினிக் கடவுள் தேவந்திமேற் றோன்றித் தம்மை நோக்கி
யுரைத்ததாக அடிகள் தாமே வரந்தருகாதையில் (170-83) அருளிச்செய்தமையால் அறியப்படும்.
செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகட்கும் தந்தை சேரலாதன் என்பதும், தாய் சோழன் மகள்
என்பதும் "குமரியொடு வடவிமயத் தொரு மொழிவைத் துலகாண்ட சேரலாதற்குத் திகழொளி
ஞாயிற்றுச் சோழன் மக ளீன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப்பேர்
யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன்" (வாழ்த்துக்காதை: உரைப்பாட்டு மடை) என்பதனாற்
பெற்றாம். செங்குட்டுவன் தந்தை குடக்கோ நெடுஞ்சேரலாதன் எனப்படுவன் என்பதும், தாய்
சோழன் மணக்கிள்ளி யெனப்படுவள் என்பதும் "குடவர்கோமான் நெடுஞ்சேரலாதற்குச் சோழன்
மணக்கிள்ளி யீன்ற மகன் கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக் கானவில் கானங் கணையிற்
போகி............கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்" என்னும் பதிற்றுப்பத்தின்
(5) பதிகத்தாற் போதரும். அடியார்க்கு நல்லார் "சோழன்றன் மகள் நற்சோணை யீன்ற
மக்களிருவருள்" (சிலப்-பதிகவுரை) என்கின்றனர். நற்சோணை யென்னும் பெயர் திரிபுடைத்துப்
போலும்.
இவர் இந்நூல் இயற்றுதற்குக் காரணம்
இதன் பதிகத்து முற் பகுதியால் விளங்கும். துறவு பூண்ட பின்னரே இஃது இவரால் இயற்றப்பட்டது.
இவர் இவ்வரலாறு நிகழ்ந்த காலத்திருந்தவராதலால் காவிரிப்பூம் பட்டினத்திலும், மதுரையிலும்
நிகழ்ந்தவற்றை அறிந்தோர்வாய்க் கேட்டும், வஞ்சி நகரத்திலும் வட நாட்டிலும்
|