பக்கம் எண் :


இளங்கோவடிகள் வரலாறு

        நிகழ்ந்தவற்றை நேரிற் கண்டும் கேட்டும் இதனை இயற்றினாராவர். அடிகள் இதனோடு தொடர்புள்ளதாகிய மணிமேகலை துறவை இறுதியிற் பாடியமைத்து இக்காப்பியத்தை முடிக்கக் கருதியிருந்தாரெனவும், கூலவாணிகன் சாத்தனார் மணிமேகலை என்ற பெயரால் அதனைச் செய்து முடித்தனரெனக் கேட்டு அவ்வாறு செய்யாது விடுத்தன ரெனவும் அடியார்க்கு நல்லார் நலிந்துரை கூறுவது பொருந்துவதன்று. இந்நூலிறுதியிற் காணப்படும் 'நூற்கட்டுரை' யென்பது பின்னுளோர் யாரோ எழுதிச்சேர்த்ததாகுமாதலின், அதில் வந்துள்ள "மணிமேகலை மேலுரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம்" என்னுந் தொடர்கொண்டு அங்ஙனங் கூறுதல் சரீலாதென்க. அங்ஙனம் மணிமேகலை வரலாற்றை இறுதியில் விரித்துரைப்பின் இக்காப்பிய வமைதி சிதைதல் ஒருதலை.

        சமயம் :-- "செஞ்சடை வானவ னருளினில் விளங்க, வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்" (26: 98-9) எனவும், "ஆனே றூர்ந்தோ னருளிற் றோன்றி, மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின்" (30 : 141-2) எனவும் போந்தவற்றால் செங்குட்டுவனுடைய பெற்றோர் சிவனருளாலே அவனை மகனாகப்பெற்றன ரென்பதும், "நிலவுக் கதிர் முடித்த நீளிருஞ் சென்னி, உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி, மறஞ்சேர் வஞ்சி மாலை யொடுபுனைந், திறைஞ்சாச் சென்னி யிறைஞ்சி வலங்கொண்டு" (26: 54-7) எனவும், "ஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன், சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத், தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள், வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், ஆங்கது வாங்கி யணிமணிப் புயத்துத் தாங்கின னாகி" (26 : 62-7) எனவும் போந்தவற்றால் செங்குட்டுவன் சிவபிரானை யன்றிப் பிறிதொரு தெய்வத்தையும் முடியால் வணங்காத சிவபத்தி மாண் புடையனென்பதும் பெறப்படுதலின் அவனுக்குத் தம்பியாகிய இவரது சமயமும் சைவமே யாதல்வேண்டும். "குணவாயிற் கோட்டத் தரசுதுறந் திருந்த" (சிலப்.பதி) என்புழி, அடியார்க்கு நல்லார் கோட்டம் என்பதற்கு அருகன் கோயில் என்று பொருள் கூறியது அடிகள் என்னும் பெயர் சைன சமயத் துறவிகட் குரியதென்னும் கருத்தினாற் போலும்? அடிகள் என்பது இறைவனுக்கும் அவனடி யார்க்கும் வழங்கும் பொதுப்பெயராவதன்றி, அருக சமயத் துறவிகளையே குறிப்பதொன்றன்றாகலானும், இளங்கோவடிகள் "பிறவா யாக்கைப் பெரியோன்" (5 : 169) எனவும், "உலகுபொதி யுருவத் துயர்ந்தோன்" (26 : 53) எனவும் கவியின் கூற்றிலேயே சிவபிரானை முழுமுதற் பொருளாகப் பாராட்டுதலானும் அவர் சைவ சமயத்தினரென்பதே துணிபு. சைன சமயக்கொள்கை சிலவும், அருகதேவன்.