பக்கம் எண் :


அடியார்க்கு நல்லார் வரலாறு

        இவருடைய குலம், சமயம், காலம் என்பன இன்னவெனப் புலப்படவில்லை. எனினும் இவரது காலம் நச்சினார்க்கினியர் காலத்திற்கு முந்தியதாகும் என்று மட்டும் கருதப்படுகிறது. இவருரைக்குச் சிறப்புப்பாயிரமாகக் காணப்படும் செய்யுட்களால் இவ ருக்கு நிரம்பையர் காவலரென ஓர் பெயருண்டெனபதும், அக்காலத் திருந்த பொப்பண்ண காங்கெயர்கோன் என்னுந்தோன்றல் இவ ருக்கு உதவிசெய்து இவ்வுரையைச் செய்வித்தானென்பதும் விளங்கு கின்றன. "இவருக்கு நிரம்பையர் காவலரென்னும் பெயர் ஊரால் வந்ததென்றும், நிரம்பை யென்னும் ஊர் கொங்கு மண்டலத்தில் குறும்பு நாட்டில் பெருங்கதையின் ஆசிரியராகிய கொங்குவேளிர் பிறந்த விசயமங்கலத்தின் பக்கத்திலுள்ளதென்றும் கொங்கு மண் டல சதகம் தெரிவிக்கின்றது." (மகாமகோபாத்தியாய, டாக்டர் வே. சாமிநாதையர் அவர்கள், சிலப், 3-ம் பதிப்பு, முகவுஉரை, பக்.11 பார்க்க.)

        இவர், பதிகத்தின் முதல் இரண்டடிகட்கு உரை கூறுமிடத்து அவற்றிலுள்ள புணர்ச்சி முடிபு சொன் முடிபுகளை இலக்கணங் காட்டி விளக்கியிருப்பதும், பொருளாராய்ச்சியை மேற்கொண்டு ஐந்திணைக்கு முரிய கரு உரிப்பொருள்களின் வகைகள் பலவற் றிற்கும் இந்நூலிலிருந்தே மேற்கோள் காட்டியிருப்பதும் இவரது இலக்கண வறிவின் சிறப்பையும் இந்நூலின்கண் இவருக்குள்ள அழுந்திய பயிற்சியையும் புலப்படுத்துவனவாம். பொருண் முடி புக்கேற்பச் சிறிதும் பெரிதுமாகத் தொடர்களை யெடுத்தமைத்து உரைகூறி, ஆண்டாண்டு இன்றியமையா இலக்கணம் முதலியவற் றை விளக்கிச்செல்லுதல் இவருரையின் இயல்பு. சிற்சில இடங் களில் அணிகள், மெய்ப்பாடுகள் முதலியன இவராற் குறிக்கப்பட் டுள்ளன. சில விடங்களில் இவர் நுண்ணிதின் உணர்ந்து காட்டி யிருக்கும் சொல்லமைப்புக்களின் பயன் கற்றோர்க்கு இன்பம் விளைப் பனவாகும். ஆயின், ஒரோவழி இவர் நயம்பட வுரைப்பனவும் அனுமானத்தால் விரித்துரைப்பனவும் நூலின் கருத்துக்கு மாறுபட் டனவாகவும் உள்ளன.

        இந்திர விழவூரெடுத்த காதையில் "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென" (5; 64) என்றும், கட்டுரை காதையில்