மாதவி
சிறப்புப் பெற்றதும் கோவலன் அவளை யுற்றதும். காவல் வேந்தன் இலைப் பூங்கோதை இயல்பினின்
வழாமை (காட்டினளாதலின்)-மாதவி தன் கூத்துக்கும் பாட்டுக்கும் அழகுக்கும் ஏற்ற முறையில்
வழுவாமல் காவலையுடைய அரசனது பச்சை மாலையுடன், தலைக் கோல் எய்தி - தலைக்கோற்
பெயர் பெற்று, தலை அரங்கு ஏறி -எல்லா முதன்மையும் பெறுதற்குக் காரணமாகிய முன்னரங்கேறப்
பெற்று, விதிமுறை கொள்கையின் - இந்நாடகக் கணிகையர்க்குத் தலைவரிசையென நூல்கள்
விதித்த முறைப்படி, ஆயிரத்து எண்கழஞ்சு ஒரு முறையாகப் பெற்றனள் - ஆயிரத்தெண் கழஞ்சு
பொன் ஒரு முறையாகப் பரிசம் பெற்றாள் : அதுவே - அன்று தொடங்கி அதுவே நாடோறும்
பரிசமாக, 'நூற்றுப்பத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த - நூற்றைப் பதின் மடங்காக அடுக்கி
அதன் கடைக்கண்ணே எட்டை நிறுத்தின (ஆயிரத்தெட்டு என்றபடி), வீறு உயர் பசும்பொன்
பெறுவது இம் மாலை - வீறு பெற்றுயர்ந்த பசும்பொன்னை விலையாகப் பெறுவது இம் மாலை,
இம்மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு என - இவ்வளவு பொன் தந்து இம் மாலையை வாங்கிச்
சூடுவார் மாதவிக்கு மணமகனாதல் அமையும்' என்று சொல்லி, மான் அமர் நோக்கி ஓர்
கூனி கைக்கொடுத்து - மான் போன்ற நோக்கினை யுடையவளாகிய ஓர் கூனிகையிற் கொடுத்து,
நகர நம்பியர் திரிதரு மறுகில் - நகரத்து ஆண்டகைச் செல்வர்கள் உலா வரும் பெருந்
தெருவில், பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த - விலைக்கு விற்பாரைப் போல்வதோர்
பண்பினால் நிறுத்த, மாமலர் நெடுங்கண் மாதவி மாலை கோவலன் வாங்கி - சிறந்த தாமரை
மலர் போன்ற கண்ணையுடைய மாதவியின் பரிச மாலையைக் கோவலன் வாங்கி, கூனி தன்னொடும்
மணமனைபுக்கு - கூனியுடனே மாதவியின் மணமனையிலே புகுந்து, மாதவி தன்னோடு அணைவுறு வைகலின்
- அவளுடன் அணைந்த அன்றே, அயர்ந்தனன் மயங்கி - அயர்ந்து மயங்கி, விடுதல் அறியா
விருப்பினன் ஆயினன் - நீங்க முடியாத விருப்பத்தை உடையனாயினான் ; வடு நீங்கு சிறப்பின்
- குற்றமற்ற சிறப்பினையுடைய, தன் மனை அகம் மறந்து என் - தன் மனைவியையும் மனையையும்
மறந்து என்க.
வடுநீங்கு சிறப்பு - மனையாட்குக்
கற்பின் சிறப்பும், மனைக்குச் செல்வச் சிறப்புமாம். வடுநீங்கு சிறப்பின் மனையகம்
மறந்து என்றது நாடகக் கணிகையைப் பற்றி அவள் மனையையே வாழுமிடமாகக் கொண்டது அவனுக்கு
நீங்காத வடுவாமெனக் குறிப்பினுணர்த்தியவாறாம். மறந்து ஆயினன் என்றியையும். என்,
அசை.
மாதவியின் ஆடன் முதலியவற்றை மன்னற்குக்
காட்டல் வேண்டி ஆடலாசிரியன் முதலாயினார் ஒருங்குகூடி, அரங்கத்து, வந்தனைசெய்து வழிபடு
தலைக்கோலை மண்ணிய பின்னர் ஊர்வலஞ் செய்து புகுந்து முன்வைக்க, மாதவி வலக்கால்
முன் மிதித்தேறி ஆடிக் காட்டினளாதலின் வேந்தனது இலைப்பூங்கோதையும் தலைக் கோற்பெயரும்
பெற்றனள் ; பெற்றபின் மாலையைக் கூனி கைக்கொடுத்து நிறுத்த, அதனைக் கோவலன்,
வாங்கி, மனைபுக்கு, அயர்ந்து, மயங்கி, மறந்து விருப்பினனாயினன் என்க.
இஃது எல்லாவடியும் அளவடியாகி முடிந்தமையின்
நிலைமண்டிலவாசிரியப்பா.
|