பக்கம் எண் :

3. அரங்கேற்று காதை







                     வெண்பா

எண்ணும் எழுத்தும் இயலைந்தும் பண்ணான்கும்
பண்ணின்ற கூத்துப் பதினொன்றும்-- மண்ணின்மேற்
போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
வாக்கினால் ஆடரங்கின் வந்து.

உரை

இறுதி வெண்பா

                            
       பூம்புகார்ப் பொற்றொடி மாதவி - அழகிய புகார்நகரிற் பிறந்த பொன்வளை யணிந்த மாதவி யென்னும் கணிகை, ஆடு அரங்கின் வந்து - நடிக்கும் அரங்கத்திலே வந்து, எண்ணும் எழுத்தும் - எல்லாக் கலைகட்கும் கருவியாகிய கணிதம் இலக்கணம் என்பவற்றையும், இயல் ஐந்தும் - இயற்றமிழின் ஐந்து பாகுபாட்டினையும், பண் நான்கும் - இசைத்தமிழின் நாற்பெரும் பண்ணையும், பண்நின்ற கூத்துப் பதினொன்றும் - நாடகத்தமிழின் இனிமையுடைய பதினொரு கூத்தினையும், தன் வாக்கினால்-தன்வாக்கினாலும் கூத்தினாலும், மண்ணின்மேல் போக்கினாள்-புவிமுழுதும் அறிந்து புகழும்படி செய்தாள்.


கூத்தினாலும் என விரித்துரைத்துக்கொள்க.

அரங்கேற்று காதை முற்றிற்று.