பக்கம் எண் :


முகவுரை

         "உழவ ரோதை மதகோதை யுடைநீ ரோதை தண்பதங்கொள்
        விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி
        விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தவெல்லாம் வாய்காவா
        மழவ ரோதை வளவன்றன் வளனே வாழி காவேரி."



        சிலப்பதிகாரம் என்பது தமிழிலுள்ள ஜம்பெருங்காப்பியங்களி லொன்று; காவிரிப்பூம் பட்டினத்திலே பெருங்குடி வாணிகர் மரபி லுதித்த கற்பிற் சிறந்த கண்ணகி அவள் கணவனாகிய கோவலன் என்பவர்களுடைய வரலாற்றை யுரைப்பது; முத்தமிழ்ப் புலமை யும் வித்தகக் கவித்திறலும் வாய்ந்த சேரமுனியாகிய இளங்கோவடி களால் இயற்றப்பெற்றது; கற்பவர் நெஞ்சினைக் கவரும் சொற் சுவை பொருட்சுவை சான்றது; 'வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு' எனப்படும் தமிழகத்தின் பகுதிகளாகிய சோணாடு பாண்டி நாடு சேர நாடு என்பவற்றின் இயல்புகளையும், முறையே அவற் றின் தலைமைப் பதிகளாகிய புகார் மதுரை வஞ்சி என்பவற்றின் பெருமைகளையும், அவற்றிடையிருந்து செங்கோலோச்சிய சோழ பாண்டிய சேர மன்னர்களின் அறன் மறன் ஆற்றல் ஆணை முறைமை என்பவற்றையும், அவர்களாற் புரக்கப்பெற்ற குடிகளின் ஒழுக்கம் ஊக்கம் ஒப்புரவாண்மை முதலியவற்றையும் நன்கு புலப் படுப்பது; மற்றும், அக்காலத்திய உழவு வாணிகங்களின் மேம்பாடு, தொழிற் பெருக்கம், மன்பதைகளின் கூட்டுறவியல், அரசியல், கல்விநிலை, சமய நிலை என்பவற்றை அறிதற்குக் கருவியாவது; திணை வளங்களை நனி விளக்குவது; அணியும் விரையும் விழவும் கூத்தும் பாட்டும் முதலிய இன்ப நுகர்ச்சித் திறங்களை இனிதியம்புவது.

        அரசியலின் வழுவிய வேந்தரை அறக்கடவுள் கூற்றாய் நின்று கொல்லு மென்பதும், புகழமைந்த பத்தினியை வானோரும் ஏத்துவ ரென்பதும், இருவினையும் செய்தோனை நாடிவந்து தம் பயனை நுகர்விக்குமென்பதும் ஆகிய மூன்று உண்மைகளும் சிலம்பு காரணமாகத் தோன்றினமையின் அவற்றை முதன்மையான உள் ளுறையாகக் கொண்டு இக்காப்பியம் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் இயற்றி நிறுவப்பெற்றது.

        காப்பியம் என்பது தமிழிலே செய்யுள் எனவும், தொடர் நிலைச் செய்யுள் எனவும் கூறப்பெறும், சிலப்பதிகாரம் முத்தமிழும்