பக்கம் எண் :


அடியார்க்கு நல்லார் வரலாறு

        "ஆடித்திங்கட் பேரிருட் பக்கத், தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று, வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண" (23; 133-5) என்றும் கூறப் பட்டுள்ள காலவரையறைகளையும் ஒரு சார் நிகழ்ச்சிகளையும் பற்றுக்கோடாகக் கொண்டு, கோவலனும் கண்ணகியும் இன்ன காலத்துக் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து புறப்பட்டன ரென்றும், இன்ன இன்ன காலத்து இன்னது இன்னது செய்தனரென்றும் இவர் கூறிச் செல்கின்றனர். அவை இவருக்குக் கணிதப் பயிற்சியும் சோதிடப் பயிற்சியும் உளவெனப் புலப்படுத்தினும் ஒரோவழி இவர் கூறுவன வழுவுடையவெனத் தோன்றுகின்றது. கட்டுரை காதையிற் கூறப்பட்டுள்ளபடி ஆடித்திங்களும் இருட்பக்கத்து அட் டமியும் வெள்ளிக்கிழமையும் அழற்குட்டமும் ஒத்து வருங்காலம் யாதெனக் கணித்தறியின் இக் கதை நிகழ்ச்சியின் காலத்தை உள்ள படி அறிந்தவாறாகும்.

        இவர், அரங்கேற்று காதையில் (3; 13) விலக்குறுப்புக்களில் ஒன்றாகிய வரி என்பதனை விளக்குழி "அவற்றின் பகுதியெல்லாம் கானல் வரியிற் கூறுதும்" என்றும், (3;26) யாழுக்கு இலக்கணங் கூறுமிடத்து, "கானல் வரியில், 'குற்ற நீங்கிய யாழ்' என்பதன் கண் விரியக் கூறியதும்" என்றும், வேனிற்காதையில், (8; 28) "மாட கம் - வீக்குங் கருவி; அது முன்னர் ஆணியென்பதனுட் கூறினாம்" என்றும் உரைத்திருத்தலின் இவர் கானல் வரிக்கு உரை செய்திருந் தன ரென்பதும், அரங்கேற்று காதையில் (3; 107) 'பூதரை யெழுதி என்பதனை விளக்குமிடத்து " அழற்படு காதைக்கண்ணே விரித்துக் கூறுதும்" என்றும் வேனிற் காதையில் (58-9) 'அந்திப்போதகத் தரும்பிடர்த் தோன்றிய திங்கட் செல்வன்' என்பதனை விளக்கு மிடத்துக் "கட்டுரை காதையுள் விரியக் கூறுவாம்" என்றும் உரைத் திருத்தலின் அழற்படுகாதை முதலியவற்றிற்கும் உரை யியற்றக் கருதியிருந்தா ரென்பதும் புலனாகின்றன. மதுரைக்காண்டத்தின் இறுதி நான்குறுப்புக்களுக்கும், வஞ்சிக்காண்டத்திற்கும் இவரால் உரை யியற்றப்படவில்லையோ, அன்றி இயற்றியவுரை இறந்து பட்டதோ என்பது தெரியவில்லை.

        அடியார்க்கு நல்லார் உரைக்குச் சிறப்புப் பாயிரமாகக் காணப் படும் பழைய செய்யுட்கள் பின்வருவன;

      1. பருந்து நிழலுமெனப் பாவு முரையும்
        பொருந்துநெறி யெல்லாப் பொருளுந் -- தெரிந்திப்
        படியார்க்கு நல்லமிர்தம் பாலித்தா னன்னூல்
        அடியார்க்கு நல்லானென் பான்.