பக்கம் எண் :


4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை

                       [கடலாடை நிலமடந்தையானவள் 'உலக முழுதாண்ட ஒரு தனித்திகிரியை உடைய உரவோனைக் காண்கின்றிலேன்' என்று திசைமுகம் பசந்து, தன் கணவனாகிய பரிதியைக் கெடுத்து வருந்துங்காலை, முடியுடைப் பேரரசர் நீங்கிய அற்றம் பார்த்துக் குடிகள் வருந்துமாறு வந்து புகுந்த குறுநில மன்னர்போல மாலைப்பொழுது வந்தது. பின்னர், இளையராயினும் பகையரசுகடியும் பாண்டியர் குல முதலாகிய வெண்பிறை தோன்றி, மாலையாகிய குறும்பினையோட்டி மீனரசினை ஆளாநின்றது. அப்பொழுது மாதவியானவள் நிலாமுற்றத்திலே மலரமளியில் ஊடலும் கூடலும் கோவலற் களித்து இன்புறுகின்றாள்; அவளைப்போன்றே கணவரோடு கூடிய மகளிர் பலரும் பூஞ்சேக்கையில் ஆவிபோலும் கொழுநர்மார்பில் ஒடுங்கிக் காவிமலர்போலும் கண்ணாற் களித்துயில் எய்துகின்றனர். கண்ணகியோ காதலனைப் பிரிந்தமையால் மங்கலவணியன்றிப் பிறிதணி அணியாமலும், வேறு ஒப்பனை யொன்றுமின்றியும், நுதல் திலகம் இழக்கவும், கண் அஞ்சனம் மறக்கவும், கூந்தல் நெய்யணி துறக்கவும் கையற்ற நெஞ்சுடன் கலங்குகின்றனள். அவள் போன்றே காதலர்ப் பிரிந்த மாதர் பலரும் ஊதுலைக் குருகுபோல் வெய்துயிர்த்துக் கண்கள் முத்தினை உதிர்க்க வருந்துகின்றனர். இவர்கள் இவ்வாறாக, இரவு நீங்கும் வைகறைகாறும் மகரக்கொடியையுடைய மன்மதன் நடுயாமத்தும் துயிலாது திரிதலால் நகர்காவல் நனிசிறப்பதாயிற்று.]