பக்கம் எண் :


4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை




30

இல்வளர் முல்லையொடு மல்லிகை யவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளியுட் பொலிந்து
செந்துகிர்க் கோவை சென்றேந் தல்குல்
அந்துகின் மேகலை யசைந்தன வருந்த
நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியுங் காதலற் களித்தாங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற் கெதிரிக்
கோலங் கொண்ட மாதவி யன்றியும்



27
உரை
34

       இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த பல்பூஞ் சேக்கைப் பள்ளியுட் பொலிந்து - மனையிடத்தே வளரும் முல்லையும் மல்லிகையும் மற்றும் பலவுமாகிய பூக்கள் அவிழ்ந்து பரந்த படுக்கையாகிய சேக்கையின்கண் பொலிவு பெற்று, செந்துகிர்க் கோவை சென்று ஏந்து அல்குல் அம்துகில் மேகலை அசைந்தன வருந்த - பரந்து உயர்ந்த அல்குலினிடத்தே அழகிய புடவையின்மேற் சூழ்ந்த பவள வடமாகிய மேகலை அசைந்தன வாய் இரங்க, நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்து - நிலவின் பயனைக் கொள்ளுதற்குக் காரணமாகிய உயர்ந்த நிலா முற்றத்திலே, கலவியும் புலவியும் காதலற்கு அளித்து - தன் காதலனுக்கு ஒருகாற் கூடுதலையும் ஒருகால் ஊடுதலையும் மாறி யளித்து, ஆங்கு ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி - அவ்விடத்து விருப்பமிக்க நெஞ்சத்துடன் கோவலனை எதிரேற்று முயங்கி, கோலம் கொண்ட மாதவி அன்றியும் - அம்முயக்கத்தால் முன் குலைந்த ஒப்பனையைப் பின்னும் வேட்கை விளைக்குங் கோலமாகத் திருந்தச் செய்த மாதவியும் அவளன்றியும்,

       ஒடு, எண்ணின்கண் வந்தது, சேக்கைப்பள்ளி - ஒரு பொருளிரு சொல். சென்று - பரந்து. துகில் செல்லப்பட்டுக் கோவையாகிய மேகலை அசைந்து வருந்த எனச் சொல்நிலை மாற்றி யுரைத்தலுமாம். மேகலை - பவளக்கோவை எட்டினாற் செய்தது. 'அசைந்தன வருந்த நிலவுப் பயன் கொள்ளும்' என்றது இடக்கரடக்கு. எதிரி - எதிரேற்று ; முயங்கி யென்றபடி. கோவலற்கு, உருபு மயக்கம்.

       1''உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
       மிக்கற்றால் நீள விடல்''


என்பவாகலின் கலவியும் புலவியும் அளித்தென்றார். மாதவியும் அன்றியும் என விரிக்க.

1 திருக்குறள், அதி. 131 ; 2.