பக்கம் எண் :


பதிகம்

சிலப்பதிகாரம் பதிகம்

[மலைநாட்டிலுள்ள நெடுவேள் குன்றில் வேங்கை மரத்தின் நிழலில் நின்ற கண்ணகிக்கு வானவர் வந்து கோவலனைக் காண்பித்து இருவரையும் வானுலகிற்கு அழைத்துச் சென்ற புதுமையைத் தம் கண்ணாற் கண்ட குன்றக்குறவர், அச்செய்தியை மலைவளங் காண வேண்டி வந்திருந்த செங்குட்டுவற்கு அறிவித்து, அதன்பின் இளங் கோவடிகட்கும் சென்று அறிவித்தனர். அப்பொழுது செங்குட்டுவ னைக் கண்டு அடிகளிடம் வந்திருந்த சாத்தனார், புகார் நகரத்து வணி கனாகிய கோவலன் நாடகக் கணிகையின் சேர்க்கையால் பொருளனைத் தையும் இழந்து, பத்தினியாகிய கண்ணகியின் காற்சிலம்பை விற் றற்பொருட்டு மதுரைக்கு வந்து, பொற்கொல்லனது பொல்லாத சூழ்ச்சியாற் கொலைக்களப்பட்டதனையும், கண்ணகி பாண்டியன்பால் வழக்குரைத்து, அவன் துஞ்சியபின், கூடற்பதியை எரியூட்டியதனை யும், மதுரைமா தெய்வம் வீரபத்தினி முன் வந்து தோன்றி அவர்கட் குப் பழம் பிறப்பில் உண்டாய சாப வரலாற்றையும், பதினாலாம் நாள் அவள் கோவலனை வானோர் வடிவிற் காண்பள் என்பதனையும் கூறத் தாம் கேட்டதனையும் அடிகட்கு உரைத்தனர். அடிகள் 'அவ் வரலாற்றைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் ஒரு காப்பியமாக நாம் இயற்றுவோம்' என்ன, 'மூவேந்தர்க்கு முரிய அதனை நீரே இயற்றுவீர் என்று சாத்தனார் கூறினர். இளங்கோவடிகள் அதற் கிசைந்து மங்கலவாழ்த்துப் பாடல் முதலாக வரந்தருகாதை ஈறாக வுள்ள முப்பது பகுதியையும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யு ளாக இயற்றிக் கூற, சாத்தனார் அதனைக் கேட்டனர்.]