[வெள்ளிமலையின் வடசேடியில் காமதேவனுக்கு விழாக் கொண்டாடும் ஓர் விஞ்சைவீரன்,
புகார் நகரில் இந்திரவிழாக் கொண் டாடப்படுவதைத் தன் காதலிக் குரைத்து, அதனைக்
காண்டற் பொருட்டாக அவளுடன் புறப்பட்டு இமயமலை, கங்கையாறு, உஞ்சைப்பதி, விந்தமலைக்
காடு, வேங்கடமலை, காவிரிநாடு என்ப வற்றை முறையே காட்டி வந்து புகாரினை யடைந்து,
நாளங்காடிப் பூதம் பலியுண்ணும் இடம், ஐவகை மன்றங்கள் முதலியவற்றைக் கண்டு காட்டி,
பின்பு மாதவியானவள் சிவபிரான் ஆடிய கொடு கொட்டி முதலாகவுள்ள பதினோராடல்களையும்
அவரவர் அணியுடனும் கொள்கையுடனும் ஆடிய கூத்தினையும் பாட்டினையும் காணாய் என வுரைத்துக்
கண்டு மகிழ்வானாயினன். அவன்போலவே வானோர் பலரும் மக்கள் காணா முறைமையால் வந்து
காண்பாராயினர். இவ்வாறு இந்திர விழா நடந்து முடியுங்கால் மாதவியின் ஆடலும் கோலமும்
முடிவுற்றன. அப்பொழுது வெறுப்புற்ற உள்ளத்தோ டிருந்த கோவலன் உவக்குமாறு மாதவி பலவகை
நறுவிரைகளாலும் அணிகளாலும் ஒப்பனை செய்துகொண்டு பள்ளியிடத்தே அவனோ டிருப்புழி,
உவா வந்துற்றமையால் நகரிலுள்ளார் பலரும் கடலாடச் செல்லாநின்றனர். மாதவி கடல்
விளையாட்டைக் காண விரும்பி னமையின் கோவலனும் அவளும் ஊர்திகளிலேறி வைகறைப் பொழுதிலே
வீதிகளைக் கடந்துசென்று கடற்கரை மணற்பரப் பிலே வண்ணம் சாந்து முதலியனவும், அப்பம்
மோதகம் முதலி யனவும், கள் மீன் முதலியனவும் விற்போர்கள் தனித்தனி யெடுத்த விளக்கங்களும்,
கலங்கரை விளக்கம், மீன்றிமில் விளக்கம் முதலி யனவும் வரம்பின்றி நெருங்கினமையால்
நுண்மணற் பரப்பில் விழுந்த வெண் சிறு கடுகையும் புலப்படக் காணும் ஒளியை யுடைய தாகி,
தாமரை மிக்க மருதவேலி போலத் தோன்றும் நெய்தலங் கானலில் தாழைகள் வேலியாகச்
சூழ்ந்த புன்னை மரத்தின் நீழலில் புதுமணற் பரப்பிலே சித்திரத் திரையைச் சுற்றிலும்
வளைத்து விதானித்து அமைத்த வெண்காற் கட்டிலில் ஏறியபின், வசந்த மாலையின் கையிலிருந்த
யாழை வாங்கி மாதவி கோவலனோ டிருந் தனள். (மாதவி தன்னை ஒப்பனை செய்தல் கூறுமிடத்தில்
அற்றை நாளில் அணியப்படுவனவா யிருந்த அணிகல வகைகள் பலவும் அறியப்படுகின்றன.)]
|