[யாழினைத் தொழுது வாங்கிய மாதவி பண்ணல் முதலிய எண் வகையாலும் இசையை எழுப்பி,
வார்தல் முதலிய எட்டுவகை இசைக் கரணத்தாலும் ஆராய்ந்து செவியால் ஓர்த்து, பணி யாதெனக்
கூறிக் கோவலன் கையில் யாழினை நீட்ட, அவன் வாங்கி, ஆற்று வரியும் கானல் வரியுமாகிய
இசைப்பாட்டுக்கள் பலவற்றை யாழிலிட்டுப் பாடினான். அவன் பாடிய பாட்டுக்கள் அகப்பொருட்டுறை
யமைந்தன வாகலின், அவற்றைக் கேட்ட மாதவி, 'இவற்றுள் ஓர் குறிப்பு உண்டு ; இவன்
தன்னிலை மயங்கினான்' எனக் கருதி, யாழினை வாங்கித் தானும் ஓர் குறிப்புடையாள்
போல வரிப் பாட்டுக்கள் பலவற்றைப் பாடினாள். யாழிசைமேல் வைத்து ஊழ்வினை வந்து
உருத்ததாகலின், கோவலன் அவள் பாடியவற்றைக் கேட்டு, 'யான் கானல்வரி பாட, இவள்
மிக்க மாயமுடையளாகலின் வேறொன்றின் மேல் மனம் வைத்துப் பாடினாள்' என உட்கொண்டு
, அவளை அணைத்த கை நெகிழ்ந்தவனாய் எழுந்து ஏவலாளர் சூழ்தரப் போயினான் ; போக,
மாதவியும் கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள்ளே புக்குக் காதலனுடனன்றியே தன் மனையை
அடைந்தாள். (இதிலுள்ள பாட்டுக்கள் பலவும் கற்போரை இன்பத்திலே திளைக்க வைக்கும்
சொற்பொருள் நயங்கள் வாய்ந்தவை.)]
|