பக்கம் எண் :

7. கானல்வரி







5




10




15




20

[ 1 ]

சித்திரப் படத்துட்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்திப்
பத்தருங் கோடு மாணியு நரம்புமென்று
இத்திறத்துக் குற்றநீங்கிய யாழ்கையில் தொழுது வாங்கிப்
பண்ணல் பரிவட்டணை யாராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்
நண்ணிய குறும்போக் கென்று நாட்டிய
எண்வகையால் இசையெழீஇப்
பண்வகையாற் பரிவுதீர்ந்து
மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தண் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிசைப்படர
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருட னுருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏருடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கர ணத்துப்
பட்டவகைதன் செவியினோர்த்து
ஏவலன்பின் பாணியாதெனக்
கோவலன் கையாழ் நீட்ட அவனும்
காவிரியை நோக்கினவுங் கடற்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனமகிழ வாசித்தல் தொடங்குமன்.




1
உரை
20

         சித்திரப் படத்துள் புக்கு - சித்திரத் தொழிலமைந்த ஆடையுட் புகுந்து, செழுங்கோட்டில் மலர் புனைந்து - அழகிய கோட்டிலே மலர் சூடி, மைத்தடங்கண் மண மகளிர் கோலம்போல் வனப்பு எய்தி - மை தீற்றிய பெரிய கண்களையுடைய மண மகளின் ஒப்பனைக் கோலம்போல் அழகினைப் பொருந்தி, பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று இத்திறத்துக்குற்றம் நீங்கிய - பத்தர் கோடு ஆணி நரம்பு என்ற இவ்வகை உறுப்புக்களின் குற்றம் ஒழிந்த, யாழ் - யாழினை, கையில் தொழுது வாங்கி - கும்பிட்டுக் கையில் வாங்கி, பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் (கண்ணிய) செலவு விளையாட்டுக் கையூழ் (நண்ணிய) குறும்போக்கு என்று நாட்டிய எண் வகையால் இசை எழீஇ - பண்ணல் முதலாக நிறுத்தப்பட்ட எட்டுவகைக் கலைத் தொழிலானும் இசையை எழுப்பி, பண் வகையாற் பரிவு தீர்ந்து - பண் வகையிற் குற்றம் நீங்கி, மரகத மணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள் - மரகதமணி மோதிரங்கள் செறிந்த அழகிய காந்தளிதழ் போலும் மெல்லிய விரல்கள், பயிர் வண்டின் கிளைபோலப் பல் நரம்பின் மிசைப் படர - பாடுகின்ற வண்டின் இனம் போலப் பலவாகிய நரம்பின்மீதே செல்ல, வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் (சீருடன்) உருட்டல் தெருட்டல் அள்ளல் (ஏருடைப்) பட்டடை என இசையோர் வகுத்த எட்டு வகையின் இசைக் கரணத்து - வார்தல் முதலாக இசை நூலோரால் வகுக்கப்பட்ட எட்டு வகை இசைக் கரணத்தாலும், பட்ட வகை தன் செவியின் ஓர்த்து - உண்டாகிய இசையின் கூறுபாட்டைத் தன் செவியாலே சீர்தூக்கி யறிந்து,
ஏவலன் பின் பணி யாது எனக் கோவலன் கை யாழ் நீட்ட - ஏவினபடி செய்தற்குரியேன் மேல் நுமது பணி யாதென்று கூறிக் கோவலன் கையிலே அவ்வியாழை நீட்ட, அவனும் காவிரியை நோக்கினவும் கடற் கானல் வரிப் பாணியும் மாதவி தன் மனம் மகிழ வாசித்தல் தொடங்கும் மன் - அவன் காவிரியைக் கருதியனவும் கடற்கானலைக் கருதி யனவுமாகிய வரிப்பாட்டுக்களை மாதவியின் மனம் மகிழும்படி வாசிக்கத் தொடங்கினான் ;

         படம் - ஆடை, அதனாலாய உறை. சித்திரப் படத்துட் புக்கமையாலும் மலர் புனைந்தமையாலும் மணமகள் போன்றது. 1"மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன" என்றார் பிறரும். கோடு - யாழின் தண்டு. பத்தர் முதலிய நான்கும் யாழின் உறுப்புக்கள். இவையன்றி மாடகம் எனப்படும் முறுக்காணியும், திவவு எனப்படும் வார்க்கட்டும் யாழுறுப்புக்களாம். குற்றமற்ற மரத்தாற் செய்த பத்தர் முதலாயினவும், கொடும்புரி, மயிர், தும்பு, முறுக்கு என்பன இல்லாத நரம்பும் உடைய யாழென்பார் 'இத்திறத்துக் குற்ற நீங்கிய யாழ்' என்றார். மரத்தின் குற்றமாவன வெயிலும் காற்றும் நீரும் நிழலும் மிகுதல். திருத்தக்கதேவர் 2"நோய் நான்கு நீங்கி" என்றருளியதும், அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையும் நோக்குக. மற்றும் அவர், பொருநராற்றுப்படை யுரையில் "கொன்றை கருங்காலி குமிழ் முருக்குத் தணக்கே' என்பதனால் கோட்டிற்கு மரம் கொன்றையும் கருங்காலியுமாம் ; பத்தர்க்குக் குமிழும் முருக்கும் தணக்குமாம்" என்றெழுதியதும் ஈண்டு அறியற்பாலது. "கொடும்புரி மயிர் தும்பு முறுக்கிவை நான்கும், நடுங்கா மரபிற் பகையென மொழிப" என்றதனால் நரம்பின் குற்றம் அறிக. யாழினிடத்தே தெய்வம் உறைதலின் அதனைத் தொழுது வாங்கினாள்; 3"அணங்கு மெய்ந்நின்ற அமைவரு காட்சி" என்பது காண்க. 4"பண்ணல் - பாட நினைத்த பண்ணுக்கு இணை கிளை பகை நட்பான நரம்புகள் பெயருந்தன்மை மாத்திரை அறிந்து வீக்குதல் ; பரிவட்டணை - அவ் வீக்கின நரம்பை அகவிரலாலும் புறவிரலாலும் கரணஞ் செய்து தடவிப் பார்த்தல் ; ஆராய்தல் - ஆரோகண அவரோகண வகையால் இசையைத் தெரிவது ; அநுசுருதி யேற்றுதல், தைவரல் ; ஆளத்தியிலே நிரம்பப் பாடுதல், செலவு ; பாட நினைத்தவண்ணத்திற் சந்தத்தை விடுதல், விளையாட்டு ; வண்ணத்திற் செய்த பாடலெல்லாம் இன்பமாகப் பாடுதல், கையூழ் ; குடகச் செலவும் துள்ளற் செலவும் பாடுதல், குறும்போக்கு" என்பது சிந்தாமணி நச்சினார்க்கினியும். இவற்றிற்கு அரும்பதவுரை யாசிரியர் காட்டிய சூத்திரங்கள் பின் வருவன:
1 "வலக்கைப் பெருவிரல் குரல்கொளச் சிறுவிரல்
விலக்கின் றிளிவழி கேட்டும் ...
இணைவழி யாராய்ந் திணைகொள முடிப்பது
விளைப்பரு மரபிற் பண்ண லாகும்."


2 "பரிவட் டணையி னிலக்கணந் தானே
மூவகை நடையின் முடிவிற் றாகி
வலக்கை யிருவிரல் வனப்புறத் தழீஇ
இடக்கை விரலி னியைவ தாகத்
தொடையொடு தோன்றியுந் தோன்றா தாகியும்
நடையொடு தோன்றும் நயத்த தாகும்."

3 "ஆராய்த லென்ப தமைவரக் கிளப்பிற்
குரன்முத லாக விணைவழி கேட்டும்
இணையி லாவழிப் பயனொடு கேட்டும்
தாரமு முழையுந் தம்மிற் கேட்டும்
குரலு மிளியுந் தம்மிற் கேட்டும்
துத்தமும் விளரியுந் துன்னுறக் கேட்டும்
விளரி கைக்கிளை விதியுளிக் கேட்டும்
தளரா தாகிய தன்மைத் தாகும்."

4 "தைவர லென்பது சாற்றுங் காலை
மையறு சிறப்பின் மனமகிழ் வெய்தித்
தொடையொடு பட்டும் படாஅ தாகியும்
நடையொடு தோன்றி யாப்புநடை யின்றி
ஓவச் செய்தியின் வட்டணை யொழுகிச்
சீரேற் றியன்று மியலா தாகியும்
நீர வாகு நிறைய தென்ப."

5 "செலவெனப் படுவதன் செய்கை தானே
பாலை பண்ணே திறமே கூடமென
நால்வகை யிடத்து நயத்த தாகி
இயக்கமு நடையு மெய்திய வகைத்தாய்ப்
பதினோ ராடலும் பாணியு மியல்பும்
விதிநான்கு தொடர்ந்து விளங்கிச் செல்வதுவே."

6 "விளையாட் டென்பது விரிக்குங் காலைக்
கிளவிய வகையி னெழுவகை யெழாலும்
அளவிய தகைய தாகு மென்ப."

7 "கையூ ழென்பது கருதுங் காலை
எவ்விடத் தானு மின்பமுஞ் சுவையும்
செவ்விதிற் றோன்றிச் சிலைத்துவர லின்றி
நடைநிலை திரியாது நண்ணித் தோன்றி
நாற்பத் தொன்பது வனப்பும் வண்ணமும்
பாற்படத் தோன்றும் பகுதித் தாகும்."

8 "துள்ளற் கண்ணுங் குடக்குத் துள்ளும்
தள்ளா தாகிய வுடனிலைப் புணர்ச்சி
கொள்வன வெல்லாங் குறும்போக் காகும்."

இனி, வார்தல் முதலியவற்றிற்கு அவரெழுதிய விளக்கங்கள் பின்வருவன: "வார்தல் - சுட்டுவிரற்
செய்தொழில் ; வடித்தல் - சுட்டு விரலும் பெருவிரலுங் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல் ; உந்தல் - நரம்புகளை உந்தி வலிவிற்பட்டதும் மெலிவிற்பட்டதும் நிரல்பட்டதும் நிரலிழிபட்டதுமென் றறிதல் ; உறழ்தல் - ஒன்றிடையிட்டும் இரண்டிடையிட்டும் ஆராய்தல் ; உருட்டல் - இடக்கைச் சுட்டுவிரல் தானே யுருட்டலும் வலக்கைச் சுட்டுவிரல் தானேயுருட்டலும் சுட்டொடு பெருவிரற் கூட்டி யுருட்டலும் இரு பெருவிரலும் இயைந்துட னுருட்டலும் என வரும்.
"தெருட்ட லென்பது செப்புங் காலை
உருட்டி வருவ தொன்றே மற்றவ்
ஒன்றன் பாட்டுமடை யொன்ற நோக்கின்
வல்லோ ராய்ந்த நூலே யாயினும்
வல்லோர் பயிற்றுங் கட்டுரை யாயினும்
பாட்டொழிந் துலகினி லொழிந்த செய்கையும்
வேட்டது கொண்டு விதியுற நாடி"
எனவரும்......இவை இசைத் தமிழ்ப் பதினாறு படலத்துட் கரணவோத்துட் காண்க."

5"வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்தும்"

என்பது ஈண்டு அறியற்பாற்று. அள்ளல், பட்டடை என்பவற்றின் இயல்பு வந்துழிக் காண்க. கண்ணிய, நண்ணிய, சீருடன், ஏருடை என்பன அடைகள். பண்வகையால், உருபு மயக்கம். பயிர் - ஒலி. இசைக்கரணம் - யாழின் பாடற்குரிய செய்கைகள். ஏவலன், தன்மை யொருமை. அரும்பதவுரை யாசிரியர், 'பாணி யாதென' என்று பாடங் கொண்டு, 'இப்பொழுது இதனை வாசி யென்று விதிக்கின்றே னல்லேன் ; வாசிக்குந் தாளம் யாதென்று யான் அறியலுறுகின்றேன் என்பாள் போலக் கொடுத்தாளென்க' என்று பொருள் கூறினர். கானலை நோக்கினவும் என விரித்து, ஆற்று வரியும் கானல் வரியும் என்க. மன் - மிகுதி ; அசையுமாம். (படாத்துள், கோட்டுமலர், இத்திறத்த, பாணி யாதென, பாணியாகென என்பன பாடவேற்றுமை.)


1. பொருந. 19.   2. சீவக. 720.      3. பொருந. 20.
4.
சீவக. 657 (உரை).  5. பொருந. 23.