ஆங்கனம் பாடிய ஆயிழை - அங்ஙனம் கோவலன் பாடினாற் போலப் பாடிய மாதவி,
பின்னரும், - பின்பும், காந்தள் மெல்விரல் - காந்தள் மலர் போலும் மெல்லிய விரலால்,
கைக் கிளை சேர்குரல் தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசை எழீஇ- கைக்கிளை குரலாகிய
இன்னிசையுடைய செவ்வழிப்பாலை என்னும் இசையை யெழுப்பி, பாங்கினிற் பாடி - அதனை
முறைமையிற் பாடி, ஓர் பண்ணுப் பெயர்த்தாள்-பின் வேறொரு பண்ணினைப் பாடத் தொடங்கினாள்
;
அங்ஙனம் என்னுஞ் சுட்டு நீண்டு
ஆங்ஙனம் என்றாகி, எதுகை நோக்கி ஆங்கனம் என்றாயிற்று. ஆங்ஙனமென்றே கூறினும் இழுக்கின்று.
விரலால் கைக்கிளை குரலாகிய செவ்வழிப்பாலை யிசையை எழுப்பியென்க. தீந்தொடை -
ஈண்டு இன்னிசை. பண்ணு - பண்ணை.
|