எனக் கேட்டு - என்று மாதவி பாடக் கேட்டு, கானல் வரியான் பாட - நான் கானல்
வரியினைப் பாட, தான் ஒன்றின் மேல் மனம் வைத்து - அவள் அப்படிப் பாடாமல் என்னை
யொழிய வேறொன்றின்மேல் மனம் வைத்து, மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்
என - வஞ்சனையுடன் கூடிய பொய்கள் பலவற்றைக் கூட்டும் மாயத்தாளாகிப் பாடினாளென்று
கோவலன் எண்ணி, யாழ் இசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின் - யாழிசைமேல்
வைத்துத் தன் ஊழ்வினை வந்து கோபித்ததாகலின், உவவு உற்ற திங்கள் முகத்தாளைக்
கவவுக் கை ஞெகிழ்ந்தனனாய் - உவாநாளிற் பொருந்திய திங்கள் போலும் முகத்தினையுடைய
மாதவியை அகத்திட்ட கை நெகிழ்ந்தவனாய், பொழுது ஈங்குக் கழிந்தது ஆகலின் எழுதும்
என்று - பொழுது கழிந்ததாகலின் இங்கிருந்தும் எழுவே மென்று, உடன் எழாது ஏவலாளர் உடன்
சூழ்தரக் கோவலன் தான் போன பின்னர் - அவள் உடன் எழாதிருக்க ஏவலாளர் தன்னைச்
சூழ்ந்து உடன்வரக் கோவலன் போயினான் ; அவ்வாறு போன பின்பு, தாது அவிழ் மலர்ச்
சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து - தாது விரிந்த பூக்களையுடைய சோலையில் ஆரவாரத்தையுடைய
ஆயத்தின் ஒலி அடங்க, கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள் புக்கு - செயலற்ற மனத்தினளாய்
வண்டியினுள்ளே அமர்ந்து, காதலனுடன் அன்றியே மாதவி தன் மனைபுக்காள் - காதலனுடன்
செல்லாது மாதவி தனியே தன் மனையை அடைந்தாள் ; ஆங்கு மாயிருஞாலத்து அரசு தலை வணக்கும்
- அகற்சியுடைய பெரிய உலகிலுள்ள அரசர்களைத் தலைவணங்கச் செய்யும், சூழி யானைச்
சுடர் வாட் செம்பியன் - முகபடாம் அணிந்த யானையையும் ஒளிபொருந்திய வாளையுமுடைய
சோழனது, மாலை வெண்குடை - மாலை யணிந்த வெண்கொற்றக் குடையானது, கவிப்ப ஆழி மால்
வரை அகவையா எனவே - பெரிய சக்கரவாள கிரி உள்ளகப்படும்படி கவிக்க என்று ;
மாயத்தாளாகலின் மனம் வைத்துப்
பாடினாள் என்றுமாம.்யாழிசைமேல் வைத்து - யாழிசையால் நிகழ்ந்ததென்று கருதும்படி செய்து.
ஓரை யாயத்து என்று பாடமிருப்பினும் பொருந்தும். காதலனுடனன்றியே என மேற்போந்த பொருளை
மீட்டும் கூறியது அவள் யாண்டும் அவ்வாறு சென்றதிலள் என்பதை யுணர்த்தற்கு. கவிப்பவெனக்
கூறி மனை புக்காளென்க ; அரசனை வாழ்த்தி முடித்தல் மரபு. ஆங்கு, அசை.
மாதவி குற்ற நீங்கிய யாழினைத்
தொழுது வாங்கி இசை யெழுப்பிச் செவியாலோர்த்துப் 'பணி யாது' எனக் கோவலன் கையில்
நீட்ட, அவன் அதனை வாங்கி அகப்பொருட் கருத்துக்களமைந்த ஆற்றுவரி முதலாய பாடல்களைப்
பாடினான் ; அவ்வாறு பாடக் கேட்ட மாதவி அவன் தன்னிலை மயங்கினானெனக் கருதிப் புலவியால்
யாழ் வாங்கித் தானும் வேறு குறிப்பினள்போற் பாடத் தொடங்கி, அகப்பொருட் கருத்துடைய
வரிப் பாடல்கலைப் பாடினாள் ; அதனைக் கேட்டுக் கோவலன் இவள் என்போலன்றி வேறொன்றின்மேல்
மனம் வைத்துப் பாடினாளெனத் துணிந்து, யாழிசை மேல் வைத்து ஊழ்வினை வந்துருத்ததாகலின்
அவளை யணைத்த கையை நெகிழ்ந்து ஏவலாளர் சூழப் புறப்பட்டுச் சென்றான் ; மாதவியும்
கையற்ற நெஞ்சினளாய் வண்டியேறித் தனியே மனை புக்காள் ; என முடிக்க.
இதில் ஆற்றுவரி முதலிய பலவகைப்
பாடல்கள் இருப்பினும், யாவும் கானலிடத்தனவாகலின, கானல்வரி யெனப்பட்டன. இதிலுள்ளன
இசைத் தமிழ்ப் பாட்டுக்களும், கட்டுரைகளும் ஆம்.
கானல்வரி முற்றிற்று
|