பக்கம் எண் :

       8. வேனிற் காதை

                    [இளவேனிற் பருவம் வந்ததனை இளந் தென்றலும், குயிலின் கூவுதலும் அறிவித்தன. கோவலன் ஊடிச் சென்றமையால் தனித் தேகிய மாதவியானவள் மேன்மாடத்து நிலா முற்றத்தில் ஏறியிருந்து, யாழினைக் கையிலெடுத்து, மேற்செம்பாலை யென்னும் பண்ணை முந்துறக் கண்டத்தாற் பாடி, அது மயங்கினமையின், அதனையே கருவியாலும் பாடத் தொடங்கிப் பதினாற் கோவையாகிய சகோட யாழை உழைகுரலாகக் கைக்கிளை தாரமாகக் கட்டி, இசை பொருந்து நிலையை நோக்கி, அகநிலை மருதம், புறநிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம் என்னும் சாதிப் பெரும் பண்களை நலம் பெற நோக்கிப் பாடுமிடத்துப் புறமாகியதோர் பண்ணிலே மயங்கினள். மயங்கினவள், காமதேவனாணையால் உலகு தொழுதிறைஞ்சும் திருமுகம் விடுப்பேமென்னும் எண்ணத்தாற் பிறந்த செவ்வியளாய்ச், சண்பக முதலியவற்றால் தொடுக்கப்பட்ட மாலையின் இடையேயுள்ளதொரு தாழை வெண்டோட்டில் அதற்கு அயலதாகிய பித்திகை யரும்பை எழுத்தாணியாகக் கொண்டு செம்பஞ்சியிலே தோய்த்து எழுதுகின்றவள், 'இளவேனிலென்பான் முறை செய்ய வறியாத இளவரசன் ; திங்கட் செல்வனும் செவ்வியனல்லன் ; ஆதலால் புணர்ந்தோர் பொழுதிடைப் படுப்பினும், தணந்தோர் துணையை மறப்பினும் பூவாளியால் உயிர் கொள்ளுதல் அவற்குப் புதிதன்று ; இதனை அறிந்தருள்வீராக' எனத் தன் முற்றாத மழலை மொழியாற் சொல்லிச் சொல்லி எழுதி, வசந்த மாலையை அழைத்து, 'இதன் பொருளையெல்லாம் கோவலற்கு ஏற்பச் சொல்லி, அவனைக் கொண்டுவருக' என விடுத்தனள். மாலை பெற்ற வசந்தமாலை கூல மறுகில் கோவலனைக் கண்டு அதனைக் கொடுப்ப, அவன் 'நாடகமகளாதலின் பலவகையாலும் நடித்தல் அவட்கு இயல்பு' என்று கூறி, ஓலையை மறுத்திட, அவள் சென்று அதனை மாதவிக்குரைப்ப, 'மாலை வாராராயினும் காலை காண்குவம்' என்று, கையற்ற நெஞ்சமுடன் மலரமளியில் கண் பொருந்தாது கிடந்தனள், (இதன்கண் சில இசை யிலக்கணங்களும், கண்கூடு வரி முதலிய எண்வகை வரிகளும் கூறப்பட்டுள்ளன.]