பக்கம் எண் :


முகவுரை

        எனவும், தமிழ்மொழி வரலாற்று நூல் எனவும், கவின் கலை நூல் எனவும் மதிக்கத் தக்க சிறப்புடையதாகவும், எல்லா வகையானும் தமிழுக்கே உரிமையுடையதாகவும், தமிழர் ஆண்மையை விளக்குவ தாகவும் உள்ளது. இந்நூலில் வந்துள்ள இலங்கை யரசனாகிய கயவாகு என்பவனைப்பற்றிய குறிப்புக்கள் இந்நூலின் காலத்தையும் கடைச்சங்க காலத்தையும் துணிதற்குக் கருவியாகவுள்ளன.

        இந்நூற்கு அரும்பதவுரை யென்பதொன்றும் அடியார்க்கு நல்லாருரை யென்பதொன்றுமாக இரண்டு பழைய உரைகள் உள்ளன. அவற்றுள் அரும்பத உரையே முந்திய தென்பது இந்திர விழவூரெடுத்த காதையில் "ஐம்பெருங் குழுவு மெண்பே ராயமும்" என்பதனுரையில் "இனி.........எனக் காட்டுவர். அரும்பதவுரை யாசிரியர்" என அடியார்க்கு நல்லார் எழுதியிருத்தலால் அறியப் படும். அரும்பதவுரை அருஞ்சொற்களின் பொருளைமட்டும் புலப் படுத்தி. ஒரோவழி முடிபும் மேற்கோளும் காட்டிச் செல்வது: நூல் முழுதுக்கும் அமைந்துள்ளது. அடியார்க்கு நல்லாருரை முற்கூறிய அரும்பதவுரையைப் பெரும்பாலும் தழுவிச் சிலவிடத்துப் பதவுரை யும் சிலவிடத்துப் பொழிப்புரையுமாக இயன்று, சொன்னயம் பொருணயங்களையும் அணிகளையும் இனிது புலப்படுத்தி, இலக்கண மும் மேற்கோளும் காட்டி விரிவாக அமைந்துள்ளது. இவ்வுரை யானது சிறுபான்மை அரும்பதவுரையை மறுத்தும் வேறுபாடங் கொண்டும் இயன்றுளதேனும் இசை நாடகப் பகுதிகளில் அரும்பத வுரையையே பிரமாணமாகக் கொண்டுள தென்பது தெளிவு; அரங் கேற்று காதையில் குழலாசிரியன் அமைதியும் யாழாசிரியன் அமை தியும் கூறுதற்கெழுந்த இன்றியமையாத இசையிலக்கணப் பகுதி களில் அரும்பதவுரையில் உள்ளவற்றினும் வேறாக ஒரு சொற்றானும் எழுதப்படாமை அறியற்பாலது. அடியார்க்கு நல்லார் இவ்விடங் களில் அரும்பதவுரையைப் பட்டாங்கு பெயர்த்தெழுதி, சொன்முடி புதானும் காட்டாது விட்டிருப்பது வியப்பிற் குரியதே. இவ்வாற் றால், அரும்பதவுரை யாசிரியர் விரியாது விடுத்த விலக்குறுப்பு முதலியவற்றை அடியார்க்கு நல்லார் பிறநூன் மேற்கோள்கொண்டு விரித்துக் காட்டியிருப்பினும், நுட்பமாகிய இசை நாடகப் பகுதிகளை விளக்குதற்கு முயன்ற வகைமையால் அரும்பதவுரை யாசிரியர்க்கே அனைவரும் கடமைப்பாடுடையராவர்.

        அடியார்க்கு நல்லார் உரை புகார்க் காண்டத்திலுள்ள கானல் வரிக்கும், மதுரைக் காண்டத்திலுள்ள வழக்குரைகாதை முதலிய நான் குறுப்புக்கட்கும், வஞ்சிக்காண்டம் முழுதிற்கும் கிடைக்க வில்லை; முப்பது உறுப்புக்களில் பதினெட்டினுக்கே கிடைத்துள.