பக்கம் எண் :


      9. கனாத்திறமுரைத்த காதை

                  [ஞாயிறு மறைந்த மாலைப் பொழுதிலே புகார் நகரில் உள்ள பூங்கொடியனைய மகளிர்கள் முல்லை மலரும் நெல்லும் தூவி விளக்கேற்றி இல்லுறை தெய்வத்தை வழிபட்டு, இரவிற் கேற்ற வேறு கோலத்தினைக் கொள்ளா நிற்க, சாத்தன் கோயிலில் நாடோறும் வழிபாடு செய்யும் நியமம் பூண்டிருந்த, கண்ணகியின் பார்ப்பனத் தோழியாகிய தேவந்தி யென்பாள் கண்ணகிக்கு உற்றதொரு குறை யுண்டென எண்ணிய மனத்தினளாய்க் கோயிலை யடைந்து, அறுகு முதலியவற்றை இவள் கணவனைப் பெறல் வேண்டுமெனத் தூவி வழிபட்டுக் கண்ணகிபாற் போய், 'கணவனைப் பெறுக' என வாழ்த்தினாள். அதுகேட்ட கண்ணகி 'நீ இங்ஙனங் கூறுதலாற் பெறுவேனாயினும் யான் கண்ட கனவினால் எனது நெஞ்சு ஐயுறா நின்றது' என்று கூறித் தான் கண்ட கனவினை எடுத்தியம்பி, அதற்கு விடையாக, ''நீ நின் கணவனால் வெறுக்கப்பட்டாயல்லை; முற்பிறப்பிலே கணவன் பொருட்டுக் காக்க வேண்டியதொரு நோன்பு தப்பினாய்; அத் தீங்கு கெடுவதாக; காவிரியின் சங்கமுகத் துறையை அடுத்த கானலில் உள்ள சோமகுண்டம், சூரியகுண்டம் என்னும் பொய்கைகளில் நீராடிக் காமவேள் கோட்டத்தைத் தொழுத மகளிர் இம்மையிற் கணவருடன் கூடி இன்புற்று, மறுமையிலும் போக பூமியிற் போய்ப் பிறந்து கணவரைப் பிரியாதிருப்பர்; ஆதலின் நாமும் ஒரு நாள் நீராடுவேமாக'' என்றுரைத்த தேவந்திக்கு, 'அங்ஙனம் துறை மூழ்கித் தெய்வந் தொழுதல் எங்கட்கு இயல்பன்று' என்று கூறி இருந்தாள். இருந்த அப்பொழுது கோவலன் அங்கு வந்து கண்ணகியோடு பள்ளியறையிற் புகுந்து, அவளது வாடிய மேனி கண்டு வருந்தி, 'கரவொழுக்கமுடைய பரத்தையொடு மருவி, என் முன்னோர் தேடித் தந்த பொருட் குவியலையெல்லாம் இழந்து வறுமை யுற்றேன்; இது எனக்கு மிக்க நாணினைத் தருகின்றது' என்று கூறினான். கூறலும், மாதவிக்குக் கொடுக்கப் பொருளில்லாமையால் இங்ஙனம் கூறுகின்றான் எனக் கண்ணகி நினைந்து, நகைமுகங் காட்டி, 'என்னிடம் இரண்டு சிலம்புகள் உள்ளன; கொண்மின்' என எடுத்தளிப்ப, அவற்றை வாங்கிய கோவலன் 'இச் சிலம்பினை முதலாகக் கொண்டு யான் மதுரையை அடைந்து வாணிகஞ் செய்து இழந்த பொருளை ஈட்டத் துணிந்துளேன்; நீயும் என்னுடன் எழுக; என் றுரைத்து, பழவினையானது நெஞ்சை ஒருப்படுத்தலால், ஞாயிறு தோன்றுதற்குமுன் அவ் வினையின் ஏவலைக் கொண்டான். (இக் காதையின் முதற் பகுதியில் தேவந்தியின் வரலாறு கூறுமிடத்தே, புகாரில் இருந்த கோட்டங்கள் பலவற்றின் பெயரும் கூறப்பட்டுள்ளன..)]