பக்கம் எண் :


    1. காடுகாண் காதை

இரண்டாவது

மதுரைக் காண்டம்

11. காடுகாண் காதை


            [உறையூரை அடைந்த கோவலன், கண்ணகி, கவுந்தி யென்னும் மூவரும் அன்று அங்கே தங்கி, வைகறையிற் புறப்பட்டுத் தென்றிசை நோக்கிச் செல்கின்றவர் ஓர் இளமரக்காவுட் புக்கனர். அப்பொழுது பாண்டியனது பல புகழையும் கூறி வாழ்த்திக்கொண்டு அவ்விடத்திலிருந்த மறையோனை 'நும்மூர் யாது? இவ்விடத்து வந்த காரணம் என்னை? என்று கோவலன் கேட்க, மறையோன், 'திருவரங்கத்தில் திருவமர் மார்பன் கிடந்த வண்ணத்தையும், திரு வேங்கட மலையின்மிசைச் செங்கணெடியோன் நின்ற வண்ணத்தையும் காணும் வேட்கையால் வந்தேன் ; குடமலை நாட்டு மாங்காடென்னும் ஊரிலுள்ளேன் ; பாண்டியனாட்டுச் சிறப்பினைக் கண் குளிரக் கண்டேனாகலின் வாழ்த்தி வந்திருந்தேன்' என்று கூறினன். பின்பு, 'மதுரைக்குச் செல்லும் செவ்விய நெறி கூறுக' வெனக் கோவலன் கேட்ப, உரைக்கின்ற மறையோன், 'நீவிர் இந் நெடிய காட்டு வழியைக் கடந்து சென்று கொடும்பாளூர் நெடுங்குளக் கரையை அடைந்தால், அங்கிருந்து சிவபிரான் சூலப்படைபோல் மூன்று நெறிகள் கவர்த்துச் செல்லும் ; அவற்றுள் வலப் பக்கத்து வழியிற் சென்றால் தென்னவன் சிறு மலை தோன்றும் ; அதனை வலத்திட்டுச் சென்மின் ; இடப் பக்கத்து நெறியிற் சென்றால் திருமால் குன்றத்தை அடைவீர் ; அதில் மயக்கமறுக்கும் பிலம் ஒன்றுண்டு ; அதன்கண் புண்ணிய சரவணம், பவகாரணி, இட்ட சித்தி என்னும் மூன்று பொய்கைகள் உள ; அவற்றிற் படிவீராயின் முறையே ஐந்திர நூலும், பழம்பிறப்புணர்ச்சியும், இட்ட சித்தியும் எய்துவீர்' என்றியம்பி, மற்றும் அப் பிலத்து நெறியில் நிகழும் வியத்தக்க நிகழ்ச்சிகளையும் கூறி, 'அவ் வழியே மதுரைக் கேகுமின் ; அந் நெறிச் செல்லாவிடின், இடையிலுள்ளது செந்நெறியாகும் ; அந் நெறியில் ஊர்கள் இடையிட்ட காடு பல கடந்து சென்றால் ஓர் தெய்வம் தோன்றி இடுக்கண் செய்யாது நயமுடன் போக்கினைத் தடுக்கும் ; அதனை யடுத்து மதுரைக்குச் செல்லும் பெருவழி உளது' என்று கூறிச் சென்றனன்.

            மூவரும் சென்று மறையோன் கூறிய இடைநெறியிற் போகும் பொழுது, கோவலன் நீர் வேட்கையால் ஓர் பொய்கைக் கரையை அடைந்து நிற்புழி, அக் கானுறை தெய்வம் வயந்தமாலை வடிவுடன் சென்று பல பணிமொழி கூறி மயக்காநிற்க, கோவலன், மயக்குந் தெய்வம் உளதென்று மறையோன் கூறக் கேட்டுளனாதலின், வஞ்ச வுருவை மாற்றும் கொற்றவையின் மந்திரத்தைக் கூறினன். கூற, அத் தெய்வம் தன்னியல்பினை யுரைத்து வணங்கிச் சென்றது. மூவருஞ் சென்று ஐயை கோட்டம் ஒன்றினை அடைந்தனர்.]