[மூவரும்
ஐயை கோட்டத்தின் ஒருபுடை இளைப்பாறி இருந்தனராக, இப்பால், வேட்டுவக் குடியில்
தெய்வத்திற்கு வழிபாடு செய்யும் உரிமையுடைய சாலினி யென்பாள் தெய்வ மேறப்பெற்று,
'எயினர் மன்றுகள் பாழ்பட்டன ; கடன் உண்ணின் அல்லது கொற்றவை வெற்றி கொடாள்
; ஆகலின் நீர் செலுத்தற்குரிய கடனைச் செலுத்துவீராக' என்றாள். என்றலும், எயினரனைவரும்
கூடித் தங்கள் தொல்குடிப் பிறந்த குமரியைக் கொற்றவையாக ஒப்பனை செய்து பரவிக்
கை தொழுது ஏத்தினர். அப்பொழுது சாலினி தெய்வமுற்றுக் கோயிலின் ஒரு சிறை கணவனோடிருந்த
கண்ணகியை நோக்கி, 'இவள், கொங்கச் செல்வி குடமலை யாட்டி, தென்றமிழ்ப்
பாவை செய்த தவக்கொழுந்து, .... ' என்று பின் நிகழ்வதறிந்து கூறக், கண்ணகி
' மூதறிவாட்டி பேதுறவு மொழிந்தனள்' என்று புன் முறுவலுடன் கணவன் புறத்தொடுங்கி
நின்றனள். குமரிக் கோலத்துக் குமரியும் வரிக்கோலம் நன்கு வாய்த்ததென்று கண்டார்
சொல்ல அருளினள். வேட்டுவர்கள் கொற்றவையின் பல புகழையும் கூறிப் பரவி, 'விறல்
வெய்யோன் வெட்சி சூடுக' எனத் தம் அரசனை வாழ்த்தினர். (இதன்கண் வேட்டுவர்
கொற்றவையை ஏத்துவனவாகவுள்ள பாட்டுக்கள் மிக்க சிறப்புடையன.)]
|
|
|