பெருமையையும் என் சிறுமையையும் அறிந்துவைத்தும் இதற்கு உரையெழுதுதலை மேற்கொள்வேனாயினேன்.
"'எழுத்தின் றிறனறிந்தோ
வின்சொற் பொருளின்
அழுத்தந் தனிலொன் றறிந்தோ--முழுத்தும்
பழுதற்ற முத்தமிழின் பாடற் குரையின்
றெழுதத் துணிவதே யான்"
என அடியார்க்கு நல்லார் கூறியிருப்பரேல்,
யான் இன்னும் எத் துணை அஞ்சுதல் வேண்டும்! எனினும், "பேர்யாற்று, நீர்வழிப் படூஉம்
புணைபோல் ஆருயிர், முறைவழிப் படூஉ மென்பது திறவோர், காட்சியிற் றெளிந்தன மாகலின்
மாட்சியிற், பெரியோரை வியத்தலு மிலமே, சிறியோரை யிகழ்த லதனினு மிலமே" என்னும்
சான் றோர் நெறியினைப் பின்பற்றும் அறிஞர்கள் என் சிறுமை நோக்கி யிகழாரென்பது
தேற்றம்.
இவ்வுரையின்கண், மூலத்தின் இன்ன
பகுதிக்கு இது பொருள் என்று தேடி இடர்ப்படாவண்ணம் சொற்களைக் கிடந்தவாறே கொண்டுகூட்டின்றித்
தனி மொழியாகவும் தொடர் மொழியாக வும் ஏற்ற பெற்றி எடுத்தமைத்துப் பொருள் கூறப்
பெற்றுளது; அரும்பதவுரை யாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் வேறுபடக் கொண்ட பாடங்களையும்,
பொருள்களையும் சீர்தூக்கிப் பார்த்து ஏற்பன கொள்ளப்பெற்றுள; ஒரோ வழி அவ்வேறுபாடுகளை
யும், உரையின் சிறந்த பகுதிகளையும் எடுத்துக் காட்டுதலும், பொருந்தாதனவெனத் தோன்றியவைகளைக்
காரணங் காட்டி மறுத் தலும் செய்யப்பெற்றுள; அவ்வுரைகளால் விளக்கம் பெறாதன விளக்கவும்
பெற்றுள; இன்றியமையாத இலக்கணங்களும் மேற் கோள்களும் ஆண்டாண்டுக் காட்டப்பெற்றுள.
இவ்வுரையின் போக்கினை ஒருவாறு தெரிவித்தல் கருதி இக் குறிப்புக்கள் ஈண்டுத் தரலாயின.
இவ்வுரையிலே பதிகச் செய்யுளும் காட்சிக் காதையும் வரலாற்று முறையில் மாறுபடா வண்ணம்
அடியார்க்கு நல்லா ருரைக்கு மாறாக அரும்பதவுரையின் கருத்தைத் தழுவிப் பொருள் எழுதப்பட்டிருத்தலையும்,
கடலாடு காதையில் பதினோராடல் கூறு மிடத்து அவ்வுரைகளால் விளக்கப்படாத இன்றியமையாத
பொருள்கள் சில (பக். 142--6) விளக்கப்பட்டிருத்தலையும், அரங் கேற்று காதையில்
யாழாசிரியன் அமைதிகூறுமிடத்து அப்பகுதியின் பொருளுணர்ச்சிக்கு இன்றியமையாத தமிழிசை
பற்றிய விளக்கம் (பக். 74--80) எழுதப்பட் டிருத்தலையும் எடுத்துக் காட்டாகக் கொண்டு,
பிறவற்றையும் அறிவுடையோர் ஆராய்ந்து காண்பாராக.
|