பக்கம் எண் :


2. வேட்டுவ வரி



18

             வேறு

அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரு
மணியுரு வினைநின மலரடி தொழுதேம்
கணநிறை பெருவிறல் எயினிடு கடனிது
நிணனுகு குருதிகொள் நிகரடு விலையே ;



18
உரை
18

        "அணிமுடி.....அடுவிலையே" அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரும் - அழகிய முடிசூடிய தேவர்கள் தம் அரசனாகிய இந்திரனொடு வந்து வணங்குகின்ற, மணி உருவினை நின மலர் அடிதொழுதேம் - நீலமணி போலும் நிறத்தினையுடையாய் நின்னுடைய மலர் போன்ற திருவடிகளை வணங்கினேம்; கண நிரை பெறு விறல் எயின் இடுகடன் இது நிணன் உகு குருதி கொள் நிகர் அடுவிலையே - திரண்ட ஆனிரையைப் பெறும் வெற்றியினையுடைய மறவர்கள் பகைவரை அடுதற்குக் காரணமாகிய விலையாக இடுங்கடன் நிணத்தொடு சிந்தும் உதிரமாகும் இக் கடனை நீ கொள்வாயாக ;

        நின என்பதன்கண் 'அ' ஆறாம் வேற்றுமையுருபு. எயின் - எயினர். எயின் அடுவிலை இடுகடன் குருதி என இயைக்க.