பக்கம் எண் :


2. வேட்டுவ வரி



19

             வேறு

துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய
வெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள்
அடுபுலி யனையவர் குமரிநின் அடிதொடு
படுகடன் இதுவுகு பலிமுக மடையே ;



19
உரை
19

        "துடியொடு..........மடையே" துடியொடு சிறுபறை வயிரொடு துவை செய வெடிபட - துடியுடனே சிறுபறையும் கொம்பும் மிக முழங்க, வருபவர் எயினர்கள் அரையிருள். அடுபுலி அனையவர் - நள்ளிரவில் வருபவர்களாகிய கொல்லும் புலியை யொத்த மறவர்கள், குமரி நின் அடிதொடு படுகடன் - குமரியாகிய நினது அடியினைத் தொட்டுச் சூளுற்ற கடன், இது உகு பலி முக மடையே - மிடற்றினின்றுஞ் சிந்தும் குருதியாகும் ; இக் கடனை நீ கொள்வாயாக ;

        நிலம் வெடிக்கும்படி வருபவரென்றுமாம். படு - பொருந்திய ; மிக்க எனினும் அமையும். முகமடை - மிடறு. இதுபலி - இக்கடன் ; கொள்கவென்பது சொல்லெச்சம். இவை மூன்றும் அவிப்பலியென்னும் துறையின்பாற் படும் ; குருதிப் பலி யென்பாரு முளர்.