[குமரியின்
கோலம் நீங்கிய பின்பு, பாண்டியர் காக்கும் நாட்டிலே புலி முதலிய கொடிய உயிர்களும்
சார்ந்தவர்க்கு இடுக்கண் செய்யாவாகலின், பகல் வெயிலிற் செல்லாது இரவு நிலவொளியிற்
செல்வேம்' எனத் துணிந்து, மூவரும் இரவின் வருகையை எதிர் பார்த்திருக்க, 'மலயத்
தோங்கி மதுரையின் வளர்ந்து புலவர் நாவிற் பொருந்திய தென்றலொடு வானிலா வெண்கதிர்
பாவைமேற் சொரி'ந்தன. கோவலன் கண்ணகி கையைத் தன் தோளில் சேர்த்திச்
செல்ல, மூவரும் வைகறைப் பொழுதிலே, தமக்குரிய ஒழுக்கத்தின் வழுவிய பார்ப்பன
ருறையும் ஒரு பகுதியைச் சேர்ந்தனர். முள்வேலி சூழ்ந்த காவலிடத்தே கவுந்தியையும்,
கண்ணகியையும் இருக்கச் செய்து, கோவலன் காலைக்கடன் கழித்தற் பொருட்டு ஓர்
நீர் நிலையை அடைந்தனன். மாதவியால் விடுக்கப்பட்டு வந்த கௌசிகன் என்னும்
அந்தணன் அவ் விடத்துக் கோவலனைக் கண்டு, அவன் பிரிவால் அவனுடைய தாய் தந்தையர்
எய்திய அளவற்ற துன்பத்தையும் வசந்தமாலை கூறிய சொற்கேட்டதும் மாதவி பள்ளியில்
மயங்கி வீழ்ந்ததனையும், மாதவியால் அனுப்பப்பட்டுத் தான் தேடி வந்ததையும் கூறி,
மாதவியின் ஓலையை அவன் கையில் நீட்டினன். கோவலன் அதன் பொருளை உணர்ந்து,
மாதவி தீதிலளெனத் தெளிந்து தளர்ச்சி நீங்கி, அவ் வோலையின் வாசகம் தம்
பெற்றோருக்கும் பொருந்தி யிருந்தமையின், எம் குரவர் மலரடியைத் திசை நோக்கித்
தொழுதேன் எனச் சொல்லி இவ் வோலையைக் காட்டு' என அதனைக் கௌசிகன் கையிற்
கொடுத்து விடுத்து, கவுந்தியும் கண்ணகியும் இருக்குமிடத்தை யெய்தி, அங்குள்ள பாணர்களுடன்
தானும் சேர்ந்து யாழ் வாசித்து, 'மதுரை இன்னும் எத்துணைக் காவதம் உள்ளது கூறுமின்'
என்ன, அவர்கள் 'மதுரைத் தென்றல் வந்தது காணீர்; பாண்டியன் மூதூர் அண்மைக்
கண்ணதே' என்று கூறவும், கூடலின்கண் எழும் பலவகை ஒலியும் கடலொலிபோல் எதிர்
கொள்ளத் துன்பம் நீங்கிச் சென்று, வையை யாற்றை மரப்புணை யாற் கடந்து தென்
கரையை யெய்தி, மதுரையின் மதிற்புறத்ததாகிய புறஞ்சேரியிற் புக்கனர். (இதன்கண்
வையைக் கரையின் இயற்கை வனப்பு முதலியன கற்போர்க்கு இன்பம் விளைப்பன.)]
|
|
|