பக்கம் எண் :

1. மங்கலவாழ்த்துப் பாடல்

      
முதலாவது

 புகார்க் காண்டம்

1. மங்கலவாழ்த்துப் பாடல்



           [பொதுவற்ற சிறப்பினையுடைய புகார் நகரிலே வண்மையிற் சிறந்த மாநாய்கன் குலக்கொம்பரும், திருமகள்போலும் அழகும் அருந்ததி போலும் கற்பும் உடையவளுமாகிய கண்ணகிக்கும், ஒப்பற்ற செல்வமும் வண்மையுமுடைய மாசாத்துவான் மகனும், மடவார்களாற் செவ்வேள் என்று பாராட்டப்படுஞ் சிறப்பினையுடைய வனுமாகிய கோவலற்கும் மணவணி காண விரும்பிய குரவர்கள் ஒரு பெருநாளில் யானை யெருத்தத்தின்மீது அணியிழையாரை இருத்தி மாநகர்க்கு மணத்தை அறிவித்தனர். பலவகை இயங்களும் ஒலித்தன. திங்களை உரோகிணி கூடிய நன்னாளில் நீல விதானத்து நித்திலப் பந்தர்க் கீழ்க் கோவலன் கண்ணகியை மறைவழி மணந்து தீவலஞ் செய்தனன். பொற் பூங் கொடி போன்ற மாதர்கள் மலரும் சாந்தும் சுண்ணமும் விளக்கும் பாலிகையும் நிறைகுடமும் முதலாய மங்கலப் பொருள்களோடு வந்து, 'காதலனைப் பிரியாமல், கவவுக்கை நெகிழாமல் வாழ்க' என வாழ்த்தி, மலர் தூவி, அருந்ததியன்னாளை அமளியின்கண் ஏற்றினார்கள்.]